மதுராந்தகம் - மோச்சேரி இடையே சுரங்கப்பாதை பணி முடக்கம்
செங்கல்பட்டு:மதுராந்தகம் - மோச்சேரி சேதிய நெடுஞ்சாலையில், தொடரும் விபத்துகளை தடுக்க சுரங்கப்பாதை அமைக்க பணி துவங்கி, இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. மதுராந்தகம் - மோச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், மக்கள் சென்றுவரும் வகையில், நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. முறையாக பராமரிக்காததால், நடைமேம்பாலம் சிதிலமடைந்ததால், மக்கள் பயன்படுத்தாமல் தவிர்த்தனர். அதன்பின், மக்கள் சாலையின் குறுக்கே கடந்து செல்கின்றனர். மதுராந்தகம் அடுத்த, மோச்சேரி, கருணாகரவிளாகம், புதுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனை, அத்தியாவசிய பணி, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்டவர்கள் மதுராந்தகம் மற்றும் பிற இடங்களுக்கு சென்று வந்தனர். அதுமட்டுமின்றி, மதுராந்கம்- செங்குந்தர்பேட்டை - மோச்சேரி இடையேயும், தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் மக்கள் சென்று வருகின்றனர். கால்நடைகளும் சாலையின் குறுக்கே அழைத்து செல்லப்படுகிறது. நெடுஞ்சாலையில், அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், இப்பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்துகளில், நுாறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இப்பகுதியில், விபத்துகளை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குபின், மதுராந்ககம், செங்குந்தர்பேட்டை - மோச்சேரி இடையே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். சிக்னல், இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். சாலை விபத்துகளை தவிர்க்க, அரசியல் கட்சியினர், மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அன்பின், மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை - மோச்சேரி இடைய சுரங்கப்பாதை, இணைப்பு சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 26 கோடி ரூபாய் நிதியை, 2023ம் ஆண்டு, ஒதுக்கீடு செய்தது. இப்பணிக்கு, கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் எடுத்தனர். அதன்பின், பணிகள் துவக்கப்படாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன. இப்பணி துவக்கப்படாததால், அடிக்கடி சாலை விபத்து நடக்கிறது. இதை தடுக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை - மோச்சேரி இடைய சுரங்கப்பாதை பணி துவக்கப்படாமல் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் விபத்து அச்சத்துடன், உயிர் பயத்துடன் சென்று வருகிறோம். சுரங்கப்பாதை பணியை துவக்கி, விரைவாக முடிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.குமார் சமூக ஆர்வலர். மோச்சேரி