செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியில், வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், மேலும் இருவர் போலீசில் சரணடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா பெருமாட்டுநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக பாண்டியன், 27. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தங்கி, செங்கல்பட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 'கலெக் ஷன் ஏஜன்டாக' வேலை பார்த்து வந்தார். இவருக்கும், செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியைச் சேர்ந்த மதியழகன், 30, என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இதனால், கடந்த 13ம் தேதி இரவு 7:00 மணியளவில் சண்முக பாண்டியனை வல்லம் பகுதிக்கு வரவழைத்த மதியழகன், தன் நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கினார். இதில், சண்முக பாண்டியன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த நிலையில், கடந்த 14ம் தேதி செங்கல்பட்டு டி.எஸ்.பி., அலுவலகத்தில், மதியழகன் மற்றும் அவரது நண்பர்களான செங்கல்பட்டு வல்லம் பகுதியைச் சேர்ந்த சூர்ய பிரகாஷ்,18, சஞ்சய்,20, ஆகியோர் சரணடைந்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய வல்லம் பகுதியைச் சேர்ந்த கலைஞன்,21, ராமன்,21, இருவரும், நேற்று முன்தினம் இரவு போலீசில் சரணடைந்தனர். இதையடுத்து போலீசார் இவர்களிடம் விசாரித்து, பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.