நடப்பதற்கே லாயக்கற்ற சாலையால் 15 ஆண்டாக ஊரப்பாக்கத்தில் அவதி
ஊரப்பாக்கம், ஊரப்பாக்கம், மணிமேகலை தெருவில், 15 ஆண்டுகளாக, நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் சாலை உள்ளதால், பகுதிவாசிகள் வேதனையில் உள்ளனர்.வண்டலுார் தாலுகா, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இவற்றில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு, 10வது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.நகர் 1க்கு உட்பட்ட மணிமேகலை தெருவில், கடந்த 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. அத்துடன, உரிய வடிகால் வசதி, குப்பை தொட்டி வசதிகளும் இல்லை.இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:ஊரப்பாக்கம் 10வது வார்டுக்கு உட்பட்ட மணிமேகலை தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். வார்டு கவுன்சிலராக தி.மு.க.,வைச் சேர்ந்த பிரபாகர் பதவி வகிக்கிறார்.இத்தெருவில், 100 மீ., துாரமுள்ள சாலையில் கற்கள் நிரம்பி, நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. தவிர, குப்பை தொட்டி வசதி இல்லாததால், தெரு ஓரத்திலேயே குப்பை வீசப்பட்டு, கொசு உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மழைநீர் வடிகால் வசதியும் இல்லை.எனவே சாலை, கால்வாய், குப்பை தொட்டி வசதி வேண்டி வார்டு கவுன்சிலர், வட்டார வளர்ச்சி அலுவலர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை.கடந்த 2021ல், முதல்வர் தனிப்பிரிவுக்கு இதுகுறித்து புகார் அளித்தோம். நான்கு ஆண்டுகளைக் கடந்தும், 'உங்கள் புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றே பதில் வருகிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து சாலை, வடிகால் மற்றும் குப்பை தொட்டி வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.