டெண்டர் முடிந்தும் துவங்காத ஊரப்பாக்கம் சாலை சீரமைப்பு
கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஐந்து கண் ரயில்வே பாலம் முதல் அருள் நகர் வரை உள்ள, சேதமான சாலையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டும் பணிகள் இன்னும் துவங்கவில்லை.இது குறித்து, அப்பகுதியினர் தெரிவித்ததாவது:ஊரப்பாக்கம், பிரியா நகர் பிரதான சாலை வழியாக அருள் நகர், மாடம்பாக்கம், ஆதனூர், கண்ணதாசன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தோர் சென்று திரும்புகின்றனர். தினமும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் சைக்கிள் மற்றும் நடந்தும் இந்த சாலையில் செல்கின்றனர்.இந்த சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் புகார் கொடுத்ததின் அடிப்படையில், சாலையை சீரமைக்க சில மாதங்களுக்கு முன் டெண்டர் விடப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே சாலையை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.