சமூக விரோதிகளின் புகலிடமாகும் வெங்கடாபுரம் சீமை கருவேலங்காடு
மறைமலை நகர், அகாட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில், வெங்கடாபுரம், தெள்ளிமேடு, சாஸ்திரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இதில், 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, தெள்ளிமேடு - வெங்கடாபுரத்திற்கு இடையே, நுாறு ஏக்கர் பரப்பளவில் உள்ள இடங்களில், 10 ஆண்டுகளுக்கு முன் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீட்டு மனை பிரித்து விற்பனை செய்தன.தற்போது அந்த இடத்தில், ஆயிரக்கணக்கான கருவேல மரங்கள் வளர்ந்து, அடர்ந்த காடு போல உருவாகி உள்ளது. இது, கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால், குடியிருப்புகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், மூதாட்டி ஒருவரை பாம்பு கடித்து, சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.இந்த கருவேல மரங்கள் உள்ள பகுதிகளில், அடிக்கடி கிராமத்திற்கு தொடர்பு இல்லாத மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளது. சில மாதங்களுக்கு முன், ஊராட்சி அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீடுகளின் பூட்டு, இரவு நேரத்தில் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது.கடந்த வாரம், சாய் நகர் பகுதியில், இளைஞர் ஒருவரை கத்தியால் வெட்டி, மொபைல் போனை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இந்த கருவேல மரங்கள், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது.இது போன்ற சம்பவங்கள், எங்கள் கிராமத்திற்கு புதிது. எனவே, மக்களின் அச்சத்தை போக்க, அடர்ந்து வளர்ந்துள்ள இந்த கருவேல மரங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள காட்டுப்பகுதி. இடம்: வெங்கடாபுரம்.