உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விழுப்புரம் பேருந்து நடைமேடை கிளாம்பாக்கத்தில் அம்போ போக்குவரத்து கழகத்தினர் அதிர்ச்சி!

விழுப்புரம் பேருந்து நடைமேடை கிளாம்பாக்கத்தில் அம்போ போக்குவரத்து கழகத்தினர் அதிர்ச்சி!

சென்னை:சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் டிச., 30ல் திறக்கப்பட்டது.இதில் தற்போது, அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.கடந்த, டிச., 30ல் திறப்பு விழாவின்போது, அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகங்களுக்கு நடைமேடைகள் ஒதுக்கப்பட்டன.அதன்படி, 8, 9 நடைமேடைகள், விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, கடலுார் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்டன.இதையடுத்து, 10, 11 நடைமேடைகள், செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்டன.இதற்கு அப்பால், 12, 13, 14 நடைமேடைகள் ஆம்னி பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்டன.தற்போது இந்த ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து, விழுப் புரம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சார்பில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:திறப்பு விழாவின்போது ஒதுக்கப்பட்டதை தவிர்த்து, 10, 11 நடைமேடைகள் தற்போது ஆம்னி பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.இதனால், திருவண்ணாமலை மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் 8, 9 நடைமேடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.இந்த நடைமேடைகளில், விழுப்புரம் மார்க்கத்தில் ஏற்கனவே, 330 பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இத்துடன், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும், 259 பேருந்துகளையும் சேர்த்தால், அங்கு கடுமையான இடப்பற்றாக்குறை ஏற்படும்.திருவண்ணாமலை மார்க்கத்தில் இயல்பு நாட்களில் மட்டும் தான், 259 பேருந்துகள் இயக்கப் படுகின்றன. விடுமுறை நாட்கள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில், கூடுதலாக, 300 பேருந்துகள் வரை இயக்கப்படும். இதனால், ஏற்கனவே தெரிவித்தபடி, 10, 11 நடைமேடைகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். இங்குள்ள பணிமனை வளாகத்தில் பணியாளர்களுக்கான உணவகம், ஓய்வு அறைகள் ஏற்படுத்த சி.எம்.டி.ஏ., அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் திடீர் மறியல்

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. மாணவர்களை, இப்பள்ளிகளில் விட ஜி.எஸ்.டி., சர்வீஸ் சாலையை, பெற்றோர் பயன்படுத்துகின்றனர்.கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் மாநகர பேருந்துகள், சர்வீஸ் சாலையில் செல்கின்றன.அதனால், அந்த சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்ல, போலீசார் தடை விதித்தனர். இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர், காலை 8:30 மணிக்கு, சாலை மறியலில் ஈடுபட்டனர். 'பள்ளி நேரங்களில் மட்டும் சர்வீஸ் சாலையை பயன்படுத்தலாம்' என, கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை