சித்தாமூர்:திருவண்ணாமலை மாவட்டம் போளூர் - செங்கல்பட்டு மாவட்டம் எல்லையம்மன் கோவில் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும், 110 கி.மீ., நீளமுடைய சாலையின் விரிவாக்க பணி, 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.சித்தாமூர் அருகே சரவம்பாக்கம் கிராமத்தில், சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக, சாலையின் இரு புறங்களிலும், 60 நபர்களுக்கு சொந்தமான 3,148 சதுர மீட்டர் இடத்தை கையகப்படுத்த முடிவானது.அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு நோட்டீஸ் வழங்கி, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, நிலத்தை ஒப்படைக்க நில உரிமையாளர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.அரசு புறம்போக்கு இடத்தில் இருந்த கடை உரிமையாளர்களுக்கு, நெடுஞ்சாலை துறை வாயிலாக இழப்பீடு கொடுத்து, கடந்த ஆண்டு கடைகள் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.பட்டா நிலத்தில் உள்ள 34 கடை உரிமையாளர்களுக்கு, தற்போது வரை முழுமையான இழப்பீடுத் தொகை வழங்கப்படாமல், இடத்தை காலி செய்யக்கூறி, நெடுஞ்சாலை துறை வாயிலாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:சாலை விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்த, எங்களிடம் கடந்த 2017ம் ஆண்டு கையொப்பம் பெறப்பட்டது.தற்போது வரை, பட்டா நிலத்தில் உள்ள 34 கடை உரிமையாளர்களுக்கு, முழுமையான இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.சில தினங்களுக்கு முன், 15 நாட்களுக்கு கடைகளை காலி செய்ய வேண்டும் என, நெடுஞ்சாலை துறை வாயிலாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.முழுமையான இழப்பீடுத் தொகையையும் வழங்கினால் மட்டுமே, இடத்தை காலி செய்வோம் எனக்கூறி, நோட்டீஸை வாங்க மறுத்துவிட்டோம்.அதற்கு, விரைவில் வழங்கப்படும் எனவும், முழு இழப்பீட்டுத் தொகையும் வழங்கிய பிறகே, சாலை விரிவாக்கப்பணி நடக்கும் எனவும், டி.ஆர்.ஓ., தெரிவித்துஉள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.