பெஞ்சல் புயலில் முறிந்த மின்கம்பங்கள் மாற்றப்படுமா?
செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட தழுதாலிகுப்பம் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதிக்கு கடப்பாக்கம் துணை மின் பகிர்வு மனையில் இருந்து, மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் செய்ய, சாலை ஓரம் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பங்கள் பழுதடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, பழுதடைந்து இருந்தது.கடந்த ஆண்டு பருவமழையில் ஏற்பட்ட பெஞ்சல் புயலின் போது, பலத்த காற்று வீசியதால், குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த 7 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.பின், தற்காலிகமாக மின்கம்பிகள் இணைத்து, மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.மின்வாரிய அலுவலகத்தில் இருந்து புதிய மின்கம்பங்கள் கொண்டுவரப்பட்டு, மூன்று மாதங்கள் கடந்த நிலையில், தற்போது வரை புதிய கம்பங்கள் மாற்றப்படாமல் உள்ளன.இதனால் குடியிருப்புப் பகுதியில் மின் ஒயர் தாழ்ந்து செல்வதால், பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.எனவே, மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய கம்பங்கள் நட்டு, மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.