கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 5 சவரன் ஆட்டை
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 5 சவரன் தங்க நகையை திருடிச் சென்ற நபரை, போலீசார் தேடி வருகின்றனர். கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஏ.எல்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவரது மனைவி கவிதா, 29. கணேஷ் பெங்களூரில் வேலை பார்த்து வரும் நிலையில், கவிதா தன் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று காலை குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நிலையில், 10:45 மணியளவில் மருத்துவமனைக்கு செல்ல, கவிதா வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் நின்றிருந்த, 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், கத்தியைக் காட்டி மிரட்டி கவிதாவை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகையை திருடிக் கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து கவிதா, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.