இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி இளைஞர் பலி
செய்யூர்:செய்யூர் அடுத்த ஓதியூர் கிராமம், முதல் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், 22. தனியார் கம்பெனியில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, சொந்த வேலை காரணமாக, பல்சர் இருசக்கர வாகனத்தில், செய்யூர் பஜார் வீதிக்கு சென்று, வீடு திரும்பினார்.செய்யூர் - முதலியார்குப்பம் இடையே உள்ள கழிவெளிப் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, எதிரே வந்த கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக, தனியார் நிறுவனம் சார்பில் இயக்கப்படும் லாரி, இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சதீஷ்குமார் மீது, லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர், அங்கிருந்து தப்பியோடினார்.விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த சதீஷ்குமார் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், லாரி டிரைவரை உடனே கைது செய்யவேண்டும் எனவும், சதீஷ்குமார் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின், சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் இன்ஸ்பெக்டர் புகழ், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, விபத்து குறித்து வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.பின், போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.