சென்னையில் 2.79 லட்சம் கட்டடங்களுக்கு சொத்து வரி மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சிக்கு கூடுதலாக 120 கோடி ரூபாய் வரை வரி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 13.58 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இதில், 2024 - 25ம் நிதியாண்டில், 1,650 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதுவரை, தெற்கு வட்டாரத்தில் 49 சதவீதம், வடக்கு வட்டாரத்தில் 42 சதவீதம், மத்திய வட்டாரத்தில் 41 சதவீதம் என, 503 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.அதேபோல், நீண்ட காலமாக சொத்து வரி நிலுவை 565 கோடி ரூபாய் வசூல் பாக்கி இருந்தது. இதில், 102 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 2024 - 25ம் நிதியாண்டில் இதுவரை, 605 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது.அத்துடன், 2.79 லட்சம் கட்டடங்களில் வரி மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, கட்டட உரிமையாளர்களிடம் இருந்து சுய விண்ணப்பம் பெற்றும், பலர் கட்டடத்தின் உண்மை பரப்பு, வகைப்பாடு விபரங்களை தெரிவிக்கவில்லை.இதனால், 'டிரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வரி மாறுபாடு கணக்கிடப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்படும் வரி மதிப்பீட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு நிதியாண்டில் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.அதன்படி, ஏப்., 1 முதல் 30ம் தேதி வரையிலும், அக்., 1 முதல் 30ம் தேதி வரையிலும் சொத்து வரி செலுத்துவோர் ஊக்கத்தொகை பெற முடியும்.குறிப்பிட்ட அரையாண்டின் சொத்து வரியை, முறையாக செலுத்தாதோருக்கு, 1 சதவீத தனி வட்டியுடன் சொத்து வரி செலுத்தும் நிலை ஏற்படுகிறது.நீண்ட காலமாக சொத்து வரி நிலுவை வைத்திருந்தோரிடம் பல்வேறு வகையில், வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதிக தொகை வைத்திருந்த முதல் 100 பேர் பட்டியல், மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.தவிர, தொடர் நோட்டீஸ் என, பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்தன் வாயிலாக, நீண்ட கால சொத்துவரி பாக்கியான 565 கோடி ரூபாயில், 102 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பாக்கி தொகையை விரைவில் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், 2.79 லட்சம் கட்டடங்களில் மறு மதிப்பீடு பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் முடியும்பட்சத்தில் கூடுதலாக, 120 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.நடப்பு நிதியாண்டில் 1,147 கோடி ரூபாய், நீண்ட கால பாக்கி 463 கோடி ரூபாய் என, 1,610 கோடி ரூபாயை வசூலிக்க, மாநகராட்சி வருவாய் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தில்லாலங்கடி
அடுக்குமாடி வீடுகளில், ஓரிரு தளங்களை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும்போது, அதற்கான வரியை செலுத்தாமல், குடியிருப்புக்கான வரியாகவே செலுத்துகின்றனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிலர், புதிதாக கட்டிய வீட்டுக்கு, முதல் நிதியாண்டு மட்டுமே, புதிய சொத்துவரியை செலுத்திவிட்டு, அடுத்த ஆண்டு முதல், பழைய வீட்டு ரசீதை வைத்து, வரி செலுத்துகின்றனர். ஒரே வீட்டு எண்ணாக இருப்பதால் குழப்பம் நீடித்து, நிலுவை தொகை அதிகரித்தது.புதிய வீடு கட்டிய பின், மூன்று மாதங்களுக்குள் வரி செலுத்த வேண்டும். கால தாமதம் ஏற்படுத்தினால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வீடு கட்டி முடித்ததை பொறியாளரிடம் தடையின்மை சான்று பெற்றும், மின் இணைப்பு பெற்றதை வைத்தும் வருவாய் துறை உறுதி செய்கிறது. இந்த புதிய நடைமுறையால், 20 சதவீதம் வரி வருவாய் அதிகரிக்கும்.
'டிரோன்' அளவீட்டில் சிக்கிய
கவுன்சிலர், எம்.எல்.ஏ., வீடு!வரி மதிப்பீட்டில் மாறுபாடு இருப்பது குறித்து, 'டிரோன்' தொழில்நுட்பம் வாயிலாக இடம், தெருவில் வழிகாட்டி மதிப்பு, கட்டடத்தின் அளவு உள்ளிட்டவை துல்லியமாக கணக்கிடப்பட்டது. 'டிரோன்' தொழில்நுட்பத்தில் எடுத்த அளவும், இருக்கிற கட்டடமும் ஒரே அளவாக இருக்க வேண்டும்.ஆனால், முன்னாள், இன்னாள் கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரின் வீடுகள், வணிக கட்டடங்களிலும் சொத்துவரி மாறுபாடு கண்டறியப்பட்டு உள்ளது.இவர்களின் வீடுகளுக்கு வரி மதிப்பீட்டாளர்கள் செல்லும்போது, சிலர் வீட்டை அளக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் பேசிய பின், மறுமதிப்பீட்டுக்கு சிலர் அனுமதித்துள்ளனர். சிலர், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -