உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2 மணி நேரத்தில் சென்னை சுத்தம் சபாஷ்! 1 லட்சம் கிலோ குப்பை அகற்றம்

2 மணி நேரத்தில் சென்னை சுத்தம் சபாஷ்! 1 லட்சம் கிலோ குப்பை அகற்றம்

சென்னை, சென்னை மாநகராட்சியில், இரண்டு மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர துாய்மை பணியில், ஒரு லட்சம் கிலோ அளவிற்கு திட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. ''இனி, பேருந்து நிறுத்தங்கள், சாலைகளில் குப்பை கொட்டுவோர், போஸ்டர் ஒட்டுவோரை கண்காணிக்க, 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் எச்சரித்துள்ளார்.சென்னை மாநகராட்சியின் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள குமரகுருபரன், மாநகராட்சியை துாய்மைப்படுத்தும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விளம்பர பதாகைகள்

அதன்படி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல், இரவு நேரங்களில் பிரதான பேருந்து நிறுத்தங்கள், உட்புற சாலைகளில் துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.கடந்த ஜூலை 22 முதல் நேற்று முன்தினம் வரை, 418.56 கி.மீ., நீளமுள்ள 471 பேருந்து தட சாலைகளில் தீவிர துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.அதில், நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த குப்பை, கட்டட கழிவு, கேட்பாரற்று கைவிடப்பட்ட வாகனங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இதுவரை, 19.38 லட்சம் கிலோ குப்பை, 1.09 கோடி கிலோ கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.இந்நிலையில், சென்னையில் உள்ள 1,265 பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில், நேற்று காலை 6:00 முதல் 8:00 மணி வரை, தீவிர துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், அலுவலர்கள் கண்காணிப்பில் 2,541 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பேருந்து நிறுத்தங்களில் நீண்ட நாட்களாக தேங்கியிருந்த, 48,700 கிலோ குப்பை, 47,000 கிலோ கட்டட கழிவு என, 95,700 கிலோ கழிவுகளை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றியுள்ளனர்.மேலும், 4,221 சுவரொட்டிகள், அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 47 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. 5,402 பயணியர் இருக்கைகள் சுத்தப்படுத்தப்பட்டதுடன், 78 சிறு பழுதுகள் கண்டறியப்பட்டு, அவற்றை சரி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இரவு நேர பணி

சாலைகளையும், பேருந்து நிறுத்தங்களையும், பாதசாரிகள் நடக்கிற பாதைகளையும் துாய்மையாக வைப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாநகராட்சி கோரிக்கை வைத்து உள்ளது.'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு குப்பை கொட்டுவோர் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் எச்சரித்துள்ளார். அவர் கூறியதாவது: நீண்ட நாட்கள் தேங்கி கிடந்த குப்பையை அகற்றுவது மட்டுமே சற்று சிரமமானது. வரும் நாட்களில் மாநகராட்சி, தேசிய, மாநில நெடுஞ்சாலை துறைகளின், பேருந்து வழித்தட சாலைகள், பேருந்து நிறுத்தங்களில் தினமும், இரவு நேர துாய்மை பணி நடக்கும்.குப்பை கொட்டுவோர், போஸ்டர் ஒட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, பேருந்து நிறுத்தங்கள், சாலைகளில் மாநகராட்சி சார்பில், 'சிசிடிவி' கேமரா அமைக்கும் பணி விரைவில் துவங்கும். யாராவது குப்பை கொட்டினால், 1913 என்ற எண்ணில் புகார் கூறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஆக 22, 2024 17:12

அள்ளுன குப்பையை எங்கே கொட்டுனீங்க?


தனராஜ்சேட்
ஆக 22, 2024 12:34

போஸ்டரை ஒட்டுறவன் அன்பாடங்காய்ச்சி. அந்த போஸ்டரில் இருக்குற நபர்களை நோண்டி நொங்கெடுக்கணும். அதைச் செய்ய மாட்டாங்க. செய்தவும் தைரியம் இருக்காது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை