உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நந்தனத்தில் 30 மீ., ஆழத்தில் தயாராகிறது 2வது மெட்ரோ நிலையம்

நந்தனத்தில் 30 மீ., ஆழத்தில் தயாராகிறது 2வது மெட்ரோ நிலையம்

சென்னை, நந்தனத்தில் இரண்டாவது மெட்ரோ ரயில் நிலையம், பூமியில் இருந்து 30 மீட்டர் ஆழத்தில் பிரமாண்டமாக அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.சென்னையில் இரண்டாம் கட்டமாக, 116 கி.மீ., துாரத்தில் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.மாதவரம் - சிறுசேரி 45.4 கி.மீ., கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ் 26.1 கி.மீ., மாதவரம் - சோழிங்கநல்லுார் 44.6 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பணி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.முக்கிய பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், ஏற்கனவே இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, அனைத்து அடிப்படை வசதிகளுடன் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.முதற்கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ் தற்போதுள்ள மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் ஆலந்துார், நந்தனம், ஆயிரம்விளக்கு, கீழ்பாக்கம், திருமங்கலம், வடபழனி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திலும் இணைகின்றன. அதன்படி, ஏற்கனவே சுரங்கப்பாதையில் செல்லும் மெட்ரோ ரயில் பாதைக்கு கீழே நந்தனம், ஆயிரம்விளக்கு, கீழ்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளன.நந்தனத்தில், இரண்டாவது மெட்ரோ ரயில் நிலையத்திற்கான கட்டமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இங்கு, வெங்கட்நாராயண சாலையில் தடுப்புகள் அமைத்து, தேவையற்ற ஆக்கிரமிப்புகள், தடுப்புகளை அகற்றி கனரக இயந்திரங்கள் பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: தற்போதுள்ள நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் தடத்தில் இந்த ரயில் நிலையம் அமைய உள்ளது.சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருப்பது போல், நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சுரங்கப்பாதையில் 150 மீட்டர் நீளத்தில், 22 மீட்டர் அகலத்தில் பிரமாண்டமாக மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது.இதற்கான பணிகளை துவங்கி உள்ளோம். மூன்று லிப்ட்கள், 12 எஸ்கலேட்டர்களும் அமைக்கப்படும். பயணியருக்கான உரிய பாதுகாப்பு, வெளிச்சம், காற்றோட்ட வசதி, அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்படும். இந்த தடத்தில், 2026ல் அனைத்து பணிகளும் முடியும் போது, இந்த மெட்ரோ ரயில் நிலையமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை