| ADDED : மே 15, 2024 10:30 PM
மெரினா:கத்திகளுடன் காரில் வலம் வந்த, நான்கு சிறுவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் கொலை திட்டத்துடன் சுற்றி வந்தனரா என விசாரிக்கின்றனர்.சென்னை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் நான்கு பேர், நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கிருந்து, ரேபிட்டோ வாயிலாக கார் ஒன்றை 'புக்கிங்' செய்துள்ளனர்.அதன்படி வந்த திருநின்றவூர், சீனிவாசன் நகரைச் சேர்ந்த சுரேஷ், 32, என்பவரின் ஹோண்டோ ரக காரில் ஏறிய நால்வரும், மெரினா கடற்கரைக்கு செல்லும்படி கூறியுள்ளனர்.கார் மெரினா கடற்கரை, அவ்வையார் சிலை அருகே வந்த போது, கலங்கரை விளக்கம் செல்ல வேண்டுமென, சிறுவர்கள் கூறியுள்ளனர்.ஓட்டுனர் சுரேஷ், காரை திருப்பி கலங்கரை விளக்கம் சென்ற போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மெரினா போலீசார் காரை நிறுத்தியுள்ளனர். பின், காரிலிருந்த சிறுவர்களிடம் விசாரித்த போது, நால்வரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்த போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த நான்கு கத்திகள் சிக்கின.இதையடுத்து அவர்களை கைது செய்து, நான்கு மொபைல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.இவர்கள், இரவு நேரத்தில் கொலை திட்டத்துடன் சுற்றி வந்தனரா? அல்லது வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டனரா என, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.