சென்னை, சென்னை மாவட்டத்தின், 16 சட்டசபை தொகுதிகளில், 19 லட்சத்து 28,461 ஆண் வாக்காளர்கள்; 19 லட்சத்து 95,484 பெண் வாக்காளர்கள்; 1,199 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என, 39 லட்சத்து 25,144 வாக்காளர்கள் உள்ளனர்.அத்துடன் வடசென்னை தொகுதியில் திருவொற்றியூர் சட்டசபை தொகுதி கூடுதலாக வருகிறது. அங்கு, 2 லட்சத்து, 76,768 வாக்காளர்கள் உள்ளனர்.தென்சென்னை தொகுதிக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து கூடுதலாக வரும், சோழிங்கநல்லுார் தொகுதியில், 6,67,606 வாக்காளர்கள் என, மொத்தமாக, 48 லட்சத்து, 35,672 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.சென்னை மாவட்டத்தின் மூன்று லோக்சபா தொகுதிகளிலும் 107 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.இந்நிலையில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் நுண்பார்வையாளர்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று நடந்தது.பின், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள, 19,419 அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று நடக்கிறது. அதன்பின், எந்த ஓட்டுச்சாவடி மையத்திற்கு அவர்கள் செல்ல வேண்டும் என்ற ஆணை வழங்கப்படும்.ஓட்டுச்சாவடி மையங்களில் காலை 5:30 முதல் மாலை, 7:00 மணி வரை, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும்.பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான 708 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
எந்தெந்த ஆவணங்கள் பயன்படுத்தலாம்!
ஓட்டுச்சாவடிகளில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என, இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அவ்வாறு இல்லாதவர்கள், ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக மருத்துவ காப்பீடு அட்டை ஆகிய ஆவணங்கள் அளிக்கலாம்.அத்துடன், ஓட்டுனர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய,மாநில பொது நிறுவனங்களில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை.லோக்சபா, சட்டசபை மேலவை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி ஓட்டளிக்கலாம்.வாக்களர் பட்டியலில், வாக்காளர் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப், ஓட்டுச்சாவடியில் அடையாள ஆவணமாக ஏற்கப்படாது.ஒரு வாக்காளர் மற்றொரு சட்டசபை தொகுதியின் வாக்களர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை ஆவணமாக பயன்படுத்தலாம். ஆனால், அந்த வாக்காளர் பெயர், அந்த ஓட்டுச்சாவடிகுரிய பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.மேலும், ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டும் ஒருவரால் ஓட்டளிக்க முடியாது. ஓட்டுச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே ஓட்டளிக்க முடியும்.வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர், வரிசை எண், ஓட்டுச்சாவடி தகவல் ஆகியவற்றை அறியலாம்.