சென்னை : விதிகளை பின்பற்றாமல், கடன் தொகைக்கு காரை பறிமுதல் செய்து விற்ற தனியார் நிதி நிறுவனம், பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்.ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு:நான் கடந்த 2018 ஜூன் 22ல், 'மாருதி சுஸுகி எர்டிகா விஎக்ஸ்ஐ ஏடி' ரக காரை வாங்கினேன்.கார் விலையில் 2.75 லட்சம் ரூபாயை பணமாகவும், மீதமுள்ள தொகைக்கு 'சுந்தரம் பைனான்ஸ்' நிறுவனத்தில் கடன் பெற்றேன்.மாத தவணை தொகையை தவறாமல் செலுத்தியதால், 'பஜாஜ் பைனான்ஸ்' நிறுவனம் சலுகையுடன், 'டாப் -அப்' கடன் வழங்கியது.பின், மாத தவணை தொகையை செலுத்தி வந்தேன்.கொரோனா காலத்தில் உடல் நலம் பாதிப்பு மற்றும் தொழிலில் ஏற்பட்ட இழப்பு ஆகியவற்றால், சரியான நேரத்தில் மாத தவணையை செலுத்த முடியவில்லை.கடன் தொகை முழுதும் செலுத்த அவகாசம் கோரியும், மாத தவணை செலுத்தும்படி தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தினர்.அடியாட்களுடன் வீட்டுக்கு வந்து, குடும்ப உறுப்பினர்களை ஆபாசமாக பேசினர். வீட்டில் இருந்த காரையும் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்து, என்னிடம் தகவல் தெரிவிக்காமல் விற்றுவிட்டனர்.சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படாமல், என்னையும், குடும்பத்தினரையும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நிதி நிறுவனம், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவகுமார், எஸ்.நந்தகோபாலன் அடங்கிய அமர்வு விசாரித்தது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கடன் தொகையை செலுத்த தயாராக இருப்பதாகக் கூறியும், அதற்கான கால அவகாசம் வழங்காமல் வாகனத்தை விற்றுள்ளனர்.வாகனத்தை பறிமுதல் செய்யும் முன், நிதி நிறுவனம் உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை.நிதி நிறுவனம் அலட்சியமாகச் செயல்பட்டதோடு, சேவை குறைபாடுடன் நடந்துள்ளது. எனவே, சேவை குறைபாடு, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு, எட்டு வாரத்திற்குள் மனுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும் பஜாஜ் நிதி நிறுவனம் வழங்க வேண்டும். இல்லையெனில், 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.