உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.66.15 கோடியில் 58 தாழ்தள பஸ்கள் இயக்கம் துவக்கம்

ரூ.66.15 கோடியில் 58 தாழ்தள பஸ்கள் இயக்கம் துவக்கம்

சென்னை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, முதியோர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் எளிதில் ஏறும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 611 தாழ்தள பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.அதன் முதற்கட்டமாக, 66.15 கோடி ரூபாயில் 58 தாழ்தள பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும், பி.எஸ்., 6 இன்ஜின் வகை சாதாரண பேருந்து 30 என, 88 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.அவற்றுடன், புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என, 100 பேருந்துகளின் சேவையை, அமைச்சர் உதயநிதி நேற்று சென்னை பல்லவன் இல்லத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலர் பனீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாழ்தள பேருந்தின் சிறப்புகள்

இதன் தளம் 400 மி.மீ., உயரத்தில் உள்ளதால், மாற்றுத் திறனாளிகள் ஏறுவது எளிது. இதன் உயரத்தை, இடது பக்கத்தில் 60 மி.மீ., அளவுக்கு சாய்க்கும் 'நீலிங்' வசதி உள்ளது.மேலும், சக்கர நாற்காலியுடைய மாற்றுத் திறனாளிகள், அதை பேருந்தில் ஏற்றி, இறக்கவும், சக்கர நாற்காலியுடன் அமர்ந்து செல்லவும் வசதி உள்ளது.தானியங்கி கதவை மூடாவிட்டால், பேருந்து நகராது. அடுத்த பேருந்து நிறுத்தம் பற்றிய ஒலி, ஒளி அறிவிப்புகள் இடம்பெறுகின்றன.மேலும் 12 மீட்டர் நீளமுள்ள இந்த பேருந்துகளில் காற்றோட்டமுள்ள அகலமான ஜன்னல்கள் உள்ளன. பின்பக்கம் கேமரா, முன்பக்கம் 'பிளைண்ட் ஸ்பாட் மிரர், இன்ஜினில் வெப்பம் அதிகரித்து, தீ விபத்து ஏற்படும் போது, தீயை அணைக்க, 'சென்சார் சேப்டி நாசில்' உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை