சென்னை : சென்னையின் முக்கிய சாலையாக, இ.சி.ஆர்., என்ற கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. நான்கு வழியான இந்த சாலையில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரத்தில் ஆறு வழியாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த சாலையின், கிழக்கு திசையில் கடற்கரை பகுதியானதால், அங்குள்ள தெருக்கள் மணல் பரப்பாக உள்ளது. இதனால், இங்கு மழைநீர் வடிகால் கட்ட தேவையில்லை.சாலையின் மேற்கு திசையில், பகிங்ஹாம் கால்வாய் செல்கிறது. இதனால், இ.சி.ஆரில் வடியும் மழைநீரை, பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், மூடு கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதன்படி, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரத்தில், 2.20 கோடி ரூபாயில், சாலையின் குறுக்கே ஒன்பது இடங்களில் 'பாக்ஸ்' மூடு கால்வாய் அமைக்கும் பணி துவங்கியது.சாலையின் இரு திசைகளிலும் 6 அடி அகலம், 6 அடி உயரத்தில் வடிகால் கட்டப்படுகிறது. இந்த வடிகால்களை இணைத்து, சாலையின் குறுக்கே, 7 அடி அகலம், 7 அடி உயரம், 95 அடி நீளத்தில் பாக்ஸ் மூடு கால்வாய் அமைகிறது.இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலையானதால், பாக்ஸ் மூடு கால்வாயாக அமைக்கிறோம். சாலையின் ஒரு பாதியில் பள்ளம் எடுத்து, பாக்ஸ் மூடு கால்வாய் பதிக்க 25 நாட்கள் வரை ஆகும். மொத்தம் ஒன்பது இடங்களில் கட்டப்பட உள்ளது. பருவமழைக்கு முன், ஐந்து இடங்களில் பதிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இ.சி.ஆரில் வடியும் மழைநீர், பாக்ஸ் மூடு கால்வாய் மற்றும் சாலையோர வடிகாலில் வடியும் மழைநீர், மாநகராட்சி கட்டிய வடிகால் வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடையும்.தேவைப்படும் இடங்களில் கூடுதல் வடிகால் மற்றும் ஏற்கனவே இருக்கிற வடிகால்களை அகலப்படுத்த மாநகராட்சியை வலியுறுத்தி உள்ளோம். இந்தப் பணி நிறைவடையும்போது, இ.சி.ஆரில் மழைநீர் தேங்குவதும், இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் தடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மூடு கால்வாய் அமையும் இடங்கள்
கொட்டிவாக்கம் 2பாலவாக்கம் 2பாண்டியன் சாலை 1நீலாங்கரை வைத்தியலிங்கம் சாலை 1வெட்டுவாங்கேணி 1வது அவென்யூ 1ஈஞ்சம்பாக்கம் திருவள்ளுவர் சாலை 1அக்கரை இஸ்கான் கோவில் அருகே 1