கொரட்டூர், கொரட்டூர், ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 30. இவரது மனைவி கனிமொழி, 28. பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும், மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, ஸ்ரீனிகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.ஒன்றரை வயதாகியும் குழந்தை நடக்க முடியாமல் தவித்தது. பல இடங்களில், பல மருத்துவர்களை அணுகியும் குழந்தையின் பிரச்னை சரியாகவில்லை. இறுதியில், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில், தசை பலவீனம் குறித்த மருத்துவ சோதனையில், அந்த குழந்தைக்கு, 'மஸ்குலர் அட்ரபி' என்ற அரிய வகை தசை பலவீன நோய் இருப்பது கண்டறியப்பட்டது.அதற்கான மருந்து அமெரிக்காவில் உள்ளது. அதை இறக்குமதி செய்து சிகிச்சை அளிக்க, 17 கோடி ரூபாய் வரை செலவாகும் என, மருத்துவர்கள் மூலம் தெரியவந்தது. இதனால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.தங்கள் குழந்தையின் உடல்நிலை குறித்து, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு உதவி கோரினர். அதன் வாயிலாக, சிறிது உதவி கிடைத்துள்ளது. ஆனால், மீதமுள்ள பெரிய தொகைக்கு என்ன செய்வது என, போராடி வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால், குழந்தையின் பெற்றோர், மேலும் கவலைக்கு ஆளாகி உள்ளனர். தமிழக அரசின் உதவியையும் நாடி உள்ளனர்.மேலும், இவர்களுக்கு உதவ விரும்புவோர் குழந்தையின் தந்தை அஜித்குமாரின் -88385 90567 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.