சென்னை, சென்னை, போயஸ்கார்டன், ராம்பிரதாப் அபார்ட்மென்ட், மூன்றாவது தளத்தில் ரே ஆர்ட் மற்றும் டிசைன் ஸ்டூடியோ நடத்தி வருகிறார், ஓவியர் ராஜாமகேஷ், 57.தஞ்சாவூர் ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவரான இவர், தன் ஸ்டூடியோவில் 'கேன்வாஷ்' துணியில், ஆயில் பெயின்டிங் வகையைச் சேர்ந்த 142 தாமரை மலர்கள் உடைய கண்காட்சியை அமைத்துள்ளார். இதை, பார்வையாளர்கள் வெகுவாக ரசிக்கின்றனர்.கண்காட்சியின் நோக்கம் குறித்து, ராஜாமகேஷ் கூறியதாவது:நம் நாட்டில் உள்ள, 142 கோடி மக்களை குறிக்கும் வகையில் 142 தாமரை ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. 142 கோடி மக்களும் ஒரே தொப்புள் கொடி உறவு; எல்லாரும் சமம்; எல்லாரும் உறவு என்பதாக தான், இந்த ஓவியம் இருக்கிறது.தாமரை மலர், இந்த பிரபஞ்சத்தில் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையது. எனவே, நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு என, ஐந்து விதமான வண்ணங்களுடன் இந்த தாமரை ஓவியங்கள் படைக்கப்பட்டுள்ளது.தாமரை, நீர் மேலாண்மையில் உயர்ந்தது. கோடையில் அனைத்து குளத்திலும் நீர் வற்றினாலும் தாமரை குளத்தில் நீர்வற்றாது. எனவே, தாமரையை வளர்க்க வேண்டும். அதை வலியுறுத்தும் விதமாகவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி, வெளி மாநிலங்கள், நாடுகளில் நடத்தவும் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.மே, 5ம் தேதி வரை, தினமும் காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி, கண்காட்சியில் ஓவியங்களை ரசிக்கலாம்.ராஜாமகேஷின் கலைநயமிக்க ஓவியங்கள், வி.வி.ஐ.பி.,களின் பூஜை அறைகளில் கடவுள்களாக அருள்பாலிக்கின்றன.