உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நெசப்பாக்கத்தில் கழிவுநீர் மாற்றுப்பாதை நீண்ட நாள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு

நெசப்பாக்கத்தில் கழிவுநீர் மாற்றுப்பாதை நீண்ட நாள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு

நெசப்பாக்கம்:கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்., நகரில், அண்ணா பிரதான சாலை உள்ளது. இது, கே.கே.நகர் மற்றும் அசோக்நகரை இணைக்கும் பிரதான சாலை.இச்சாலையின் மட்டத்தில் இருந்து, 20 அடி ஆழத்தில் செல்லும், 750 மி.மீ., விட்டம் உடைய கழிவுநீர் குழாய் வாயிலாக மாம்பலம், சைதாப்பேட்டை, அசோக் நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர்., நகர், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர், நெசப்பாக்கத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது. இந்த கழிவுநீர் குழாய், 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது வீடுகள் அதிகரித்துள்ளதால், இந்த குழாயின் கொள்ளளவு போதுமானதாக இல்லை. இக்கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மண் சரிந்து, அண்ணா பிரதான சாலையில், எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் சந்திப்பு, அஜந்தா பேருந்து நிறுத்தம், அழகிரி சாலை சந்திப்பு, அம்மா உணவகம் என, பல்வேறு இடங்களில் சாலை உள்வாங்கி, அடிக்கடி பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன.இதற்கு நிரந்தர தீர்வு காண, மாற்று பாதை அமைக்க குடிநீர் வாரியம் முடிவு செய்தது. இதையடுத்து, 31 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பாதையில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.3 கோடி

தற்போது, அண்ணா பிரதான சாலையிலுள்ள கழிவுநீர் பாதையில் விருகம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் கே.கே.நகர் ஒரு பகுதியில் சேகரமாகும் கழிவுநீர், முனுசாமி சாலை வழியாக, அண்ணா பிரதான சாலை செல்கிறது.பின், மாம்பலம், சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் குழாயுடன் இணைந்து, நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்றது.இதனால் அழுத்தம் அதிகரித்து சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி பல தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடியது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, 3 கோடி ரூபாய் செலவில், முனுசாமி சாலையில் இருந்து வரும் கழிவுநீர் குழாயை, நெசப்பாக்கம் இணைப்பு சாலையின் குறுக்கே, 40 மீட்டர் துாரத்திற்கு மாற்று குழாய் அமைத்து, நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு உந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, நெசப்பாக்கம் இணைப்பு சாலையில் ஒரு பகுதி மூடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இப்பணிகள் முடிந்த பின், விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ