திருவொற்றியூர்:திருவொற்றியூர், அம்சா தோட்டம் 2வது தெருவைச் சேர்ந்தவர் வினோத், அவர் மனைவி மதுமதி, 33. திருவொற்றியூர், கிராமத்தெரு அருகே, இவரை தறிகெட்டு ஓடிய எருமை, மதுமதியை முட்டி துாக்கி, 50 அடி துாரத்திற்கு தரதரவென இழுத்து சென்றது. இதில் படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பெரியார் நகர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு 60 தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, மாநகராட்சி அதிகாரிகள் எருமையை பிடித்து, பெரம்பூர் மாட்டு தொழுவத்தில் அடைத்தனர். மேலும், மாட்டின் உரிமையாளர்களான, திருவொற்றியூர், கோமாதா நகரைச் சேர்ந்த கோட்டீஸ்வர ராவ், 50, வெங்கட சாய், 30, ஆகிய இருவரை, இரு தினங்களுக்கு முன், திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ நிதியுதவி வழங்கக் கோரி, உறவினர்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, இரு முறை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து, மண்டல குழு தலைவர் தனியரசு, பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ செலவிற்காக, 50,000 ரூபாய் வழங்கினார்.இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் மதுமதிக்கு, காலில் ஏற்பட்ட புண் பெரிதாகி, அழுக ஆரம்பித்துள்ளது. எனவே, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என, மருத்துவர் தெரிவித்துள்ளனர். இதுவரையில், 1 லட்ச ரூபாய் வரை பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 2.5 லட்ச ரூபாய் செலவாகும் என தெரிகிறது. மாநகராட்சி, தமிழக அரசு கவனித்து, மருத்துவ நிதியுதவி செய்ய வேண்டும் என, உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.