| ADDED : மே 03, 2024 12:30 AM
சென்னை, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என அடையாளப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனை மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.சென்னை கோடம்பாக்கம் பகுதியில், கேடன்ஸ் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணியருக்கு, 'ஸ்கேன்' செய்து, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என, இம்மருத்துவமனை தெரியப்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இப்புகாரை தொடர்ந்து மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் இளங்கோ தலைமையிலான குழுவினர், நேற்று இம்மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.அப்போது, மருத்துவமனையில் மூன்று 'ஸ்கேன்' கருவிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால், ஆய்வின் போது இரண்டு கருவிகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. மற்றொரு கருவி காட்டப்படவில்லை. மேலும், சில மருத்துவ பரிசோதனை அறிக்கைகளிலும் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டது.இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சில குறைபாடுகள், தவறுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக, சட்டத்திற்கு புறம்பாக, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக, அம்மருத்துவமனைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.முழுமையான விசாரணை மற்றும் ஆவணங்களை ஆராய்ந்த பின், மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.