கோயம்பேடு, எழும்பூருக்கு கூடுதல் பேருந்து சேவை மணலிபுதுநகர் பயணியர் கோரிக்கை
மணலிபுதுநகர்:சென்னை மாநகராட்சியின், கடைகோடி பகுதியான மணலிபுதுநகரில் 50,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்குள்ள மக்களுக்கு, மாநகர பேருந்து சேவை ஒன்றே பொது போக்குவரத்து ஆதாரம். மாறாக மெட்ரோ ரயில் சேவைக்கு, 7 கி.மீ., துாரம் பயணித்து விம்கோ நகருக்கு வர வேண்டும்.மின்சார ரயில் சேவைக்கு, பல கி.மீ., துாரம் பயணித்து, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், எண்ணுார், அத்திப்பட்டு, கத்திவாக்கம், விம்கோ போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.மணலிபுதுநகரை சுற்றிலும், கன்டெய்னர் பெட்டக முனையங்கள் அதிகம் உள்ளன. இதன் காரணமாக, கனரக போக்குவரத்து மிகுதியாக இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்திலே பயணிக்கின்றனர்.இந்நிலையில், மணலிபுதுநகரில் இருந்து மற்ற பகுதிகளுக்கு குறைந்த அளவிலேயே மாநகர பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிகாலையில், ஓரிரு பேருந்துகளே இயக்கப்படுகின்றன.மேலும், சென்னையின் பிரதான பகுதிகளான கோயம்பேடு, எழும்பூர், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளுக்கு, இப்பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள், தொழிலாளர்கள் அதிகாலை வேளைகளில் செல்கின்றனர்.அவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. சிற்றுந்து சேவை
மணலியில் இருந்து, விம்கோ மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், சிற்றுந்து இயக்கப்படுவது போல், மணலிபுதுநகரில் இருந்தும் சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.