| ADDED : ஆக 23, 2024 12:16 AM
சென்னை, மெட்ரோ ரயில் பணிகளால் தூங்க முடியவில்லை என வழக்கு தொடர்ந்தவருக்கு, தமிழக அரசிடம் புகார் அளிக்குமாறு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.பால்போர் சாலையில் வசிக்கும் லலித்குமார் ஷா என்பவர், 'மெட்ரோ ரயில் நிலைய பணிகள் நடக்கும் இடங்களுக்கு மிக இருகில் மருத்துவமனைகள், பள்ளிகள், கோவில்கள் உள்ளன. இந்த பணிகளால் அளவுக்கு அதிகமாக சத்தம் ஏற்படுவதால், அப்பகுதியில் வசிக்கும் வயதானோர், நோயாளிகளால் தூங்க முடியவில்லை' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் வசிக்கும் கீழ்ப்பாக்கம் பால்போர் சாலை பகுதி, அமைதி மண்டலமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. அமைதி மண்டல பகுதியில் அதிக ஒலி மாசு ஏற்படுவது குறித்து, உரிய அரசு அமைப்புகளிடம் மனுதாரர் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. நேரடியாக தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். காவல் துறை, மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் மனுதாரர் புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளித்தால் அதை அரசு பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.