வளசரவாக்கம், வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால், அதிருப்தி நிலவுகிறது.வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள இந்த கோவிலை ஒட்டி, 1.87 ஏக்கர் பரப்பில் திருக்குளம் அமைந்துள்ளது.குளத்திற்கு போதிய வரத்து கால்வாய் இல்லாததால், வறண்டு காட்சியளித்தது. இது தொடர்பாக, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.இதன் எதிரொலியாக, குளத்தில் மழைநீர் தேங்கும் வகையில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. மேலும், 87 லட்சம் ரூபாய் செலவில், குளத்தை துார் வாரி கரையமைத்து, நடைபாதை, மின் விளக்குகள் அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது.ஒப்பந்தப்படி இப்பணிகள், 2021 செப்., 30ம் தேதியுடன் நிறைவு பெற்றிருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால், குளத்தை சீரமைக்கும் பணிகள் தடைபட்டன. இந்நிலையில், கோவில் குளத்தில் மழைநீர் வடிகால் துார் வாரிய, கழிவுநீர் கலந்த மண்ணை நிரப்புவதாக, நம் நாளிதழில் கடந்த 2022 ஜூன் 27 ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஜூன் 28ம் தேதி, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் குளத்தை ஆய்வு செய்தார். பின், இந்த குளத்தை மாநகராட்சி மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து சீர் செய்யும் என தெரிவித்தார். ஆனால், கோவில் குளத்தை அமைச்சர் ஆய்வு செய்து ஒன்றரை ஆண்டுகளாகியும், இன்னும் பணிகள் நடைபெறவில்லை. இதுகுறித்தும் தொடர்ந்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், இந்த குளத்தை 2.99 கோடி ரூபாய் செலவில் சீர் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டு, அமைச்சர் சேகர்பாபு தலைமையில், அடிக்கல் நாட்டு விழா 2024 பிப்ரவரியில் நடந்தது. இதையடுத்து, குளம் சீரமைப்பு பணிகள், மீண்டும் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இதனால் 2021ம் ஆண்டு இருந்த அதே நிலையில் கோவில் குளம் மீண்டும் உள்ளது. எனவே, கோவில் குளத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.