மூலக்கொத்தளம், தண்டையார்பேட்டை, மூலக்கொத்தளம் மயானத்தை ஒட்டி, ராம்தாஸ் நகரில், நுாற்றுக்கணக்கானோர் குடிசை வீடுகளில் வாழ்ந்து வந்தனர். தங்களுக்கு வீடு கட்டித்தர, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.மூலக்கொத்தளம் மயானத்திற்கு 35 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 23 ஏக்கர் நிலம் போக காலியாக உள்ள 12 ஏக்கர் நிலத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 138.29 கோடி ரூபாய் மதிப்பீடில், 13 மாடியில் 1,044 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதற்கான பணிகள், 2018ல் அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கி 2020ல் நிறைவடைந்தது. ஆனால், குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்புகள் வழங்காததால் குடியிருப்புகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஒருவழியாக இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது. லிப்ட் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.இந்த நிலையில், ராமதாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த 227 பேருக்கு, நான்கு ஆண்டு காத்திருப்பிற்கு பின், குடியிருப்புகளுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளை, ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று வழங்கினர்.இது குறித்து எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி கூறியதாவது:மூலக்கொத்தளம் நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில், ராம்தாஸ் நகர், ப்ரிவில் தோட்டம் பகுதியை சேர்ந்த 227 வீடுகள், பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 128 பேருக்கு வரும் 14ம் தேதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.குடியிருப்புவாசிகள், பங்களிப்பு தொகை 1.50 லட்ச ரூபாயில் 50 ஆயிரம் செலுத்தி, வீட்டின் சாவியை பெற்று கொள்ளலாம். மீதமுள்ள 1 லட்ச ரூபாயை அரசு வழங்கும் வங்கி கடன் மூலம் செலுத்தலாம்.முதல், இரண்டு தளங்கள் மாற்றுத்திறனாளிகள், 60 வயது மேற்பட்டோருக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன. மற்றவர்களுக்கு அடுத்த வாரம் குலுக்கல் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட உள்ளது.மீதமுள்ள குடியிருப்புகளில் 30 சதவீதம், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.