அண்ணா நகர், அண்ணா நகர் மேற்கு, 18வது பிரதான சாலை வழியாக, கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 100 அடி சாலையில், அண்ணா நகர் மேற்கு பேருந்து பணிமனை இயங்கி வந்தது. தற்போது, நிர்வாக காரணங்களுக்காக, பணிமனைக்கு பதில், பேருந்துகள் பழுதுபார்க்கும் இடமாக செயல்படுகிறது.இங்கு நின்று சென்ற பேருந்துகள், நேரடியாக கோயம்பேடிற்கு செல்லும் வகையிலும், அம்பத்துார், செங்குன்றம் நோக்கி செல்லும் வழியாகவும் திருப்பி விடப்பட்டன.இதனால், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வந்த பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல், பேருந்து பணிமனைக்கு எதிரே, 18வது பிரதான சாலை உள்ளது.இந்த சாலையை சுற்றி உதயம் காலனி, ஐஸ்வர்யா காலனி, தங்கம் காலனி, முல்லைநகர் போன்ற பகுதிகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.இந்த பிரதான சாலை வழியாக சென்ற பல பேருந்துகள், கொரோனாவுக்கு முன்பே நிறுத்தப்பட்டன. இதனால், இப்பகுதிகளில் வசிப்போர், பேருந்து வசதியின்றி சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து, பேருந்து சேவையை பயன்படுத்தும் டி.கிருஷ்ணமூர்த்தி, 60, என்பவர் கூறியதாவது:அண்ணாநகர் மேற்கு பணிமனையில் இருந்து, 18வது பிரதான சாலை வழியாக ஆறாவது நிழற்சாலை, அண்ணா நகர் காவல் நிலையம், அமைந்தகரை வழியாக, '15டி, 24ஏ, 27எச், 7இ, 47சி, 41இ' உள்ளிட்ட தடம் எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.அவை படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது '24ஏ' பேருந்து மட்டுமே, நீண்ட இடைவெளி நேரத்தில் இயக்கப்படுகிறது. அதுவும் பல நேரங்களில் வருவதில்லை. அண்ணா நகர் மேற்கிலிருந்து புறப்பட்ட, '7எப்' பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன.இதனால், பிரதான சாலையைச் சுற்றி வசிப்போர் பிராட்வே, புரசைவாக்கம், எழும்பூர், தி.நகர், மயிலாப்பூர், அடையாறு வழித்தடங்களில் சேவையின்றி தவிக்கின்றனர்.இதற்காக கோயம்பேடு, அண்ணா நகர் 2வது அவென்யூ வரை செல்ல வேண்டி உள்ளது.அதேபோல், 2வது நிழற்சாலை வழியாக, '7எம், 7இ, 147ஏ, 147சி, 40எச்' போன்ற தடம் எண் பேருந்துகள் செல்கின்றன. இவற்றில் ஏதாவது ஓரிரு வழித்தடங்களை மாற்றி, 18வது பிரதான சாலை வழியே இயக்க, அரசு முன்வர வேண்டும்.சமீபத்தில் இயக்கப்பட்ட 'மினிபஸ்'கள் கூட தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், அலட்சியமாக உள்ளனர். பிரதான சாலையில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.