நீர்வழித்தடம் துார்வாருதல் கொந்தளித்த எம்.எல். ஏ.,க்களால் விழித்துக்கொண்ட நீர்வ ளத்துறை
சென்னை:சென்னையில், பருவமழைக்கு முன்பாக, அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.நடப்பாண்டு இப்பணிக்கு முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில், 138 இடங்களில் பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.இதைத்தொடர்ந்து, மத்திய பகிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய்களை சீரமைக்க, கூடுதலாக 3.50 கோடி ரூபாயும், கூவத்தில் துார்வாரும் பணிக்கு 18 கோடி ரூபாயும் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.பெரும்பாலான பணிகளை, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் எடுத்துள்ளனர். இவர்கள், துார்வாரும் பணியில் உரிய கவனம் செலுத்தவில்லை.வடகிழக்கு பருவமழை துவங்கினால், நீர்வழித்தடங்களில் தேங்கிக் கிடக்கும் ஆகாயத்தாமரை, புதர்கள், செடி, கொடிகள் உள்ளிட்டவை அடித்துச் சென்றுவிடும்; செலவு குறைந்து அதிக லாபம் கிடைக்கும் என 'கணக்கு' போட்டுள்ளனர்.இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் கடந்த 2ம் தேதி வெளியானது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அவசர ஆலோசனை சமீபத்தில் நடந்தது.இதில் பங்கேற்று பேசிய திரு.வி.க., நகர் தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., தாயகம் கவி உள்ளிட்டோர், துார்வாரும் பணிகள் முறையாக நடக்கவில்லை என கொந்தளித்தனர்.இதையடுத்து, பணியை விரைவாகவும், முழுமையாகவும் மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி உத்தரவிட்டார்.இதன் எதிரொலியாக, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜானகி தலைமையில், நீர்வளத்துறை பொறியாளர் குழுவினர், அண்ணா நகர், வில்லிவாக்கம், திரு.வி.க.,நகர் உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.இதையடுத்து, ஒப்பந்த நிறுவனங்கள், 'பொக்லைன்' வாயிலாக பணிகளை மேற்கொண்டனர்.
புரிதல் இல்லாத அதிகாரிகள்
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள நீர்வழித்தடங்களில், எங்கெங்கு வெள்ள பாதிப்பு ஏற்படும் என்பது, அங்கு பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நீர்வளத்துறையினருக்கு நன்கு தெரியும். எனவே, பருவமழை முன்னெச்சரிக்கையாக, இங்கெல்லாம் பணிகள் நடத்தப்படும்.தற்போது, வெளிமாவட்டங்களில் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றியவர்கள், அரசியல் செல்வாக்கால், சென்னையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகளை பராமரிக்கும் பாலாறு வடிநில வட்டத்தில் முக்கிய பதவியும் காலியாக உள்ளது.இதனால், சென்னையில் உள்ள நீர்வழித்தடங்கள் குறித்த புரிதல் இல்லாமல், புதிய அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இதனால், வடகிழக்கு பருவமழையை நடப்பாண்டு நீர்வளத்துறை திறமையாக எதிர்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.