சென்னை:சென்னை, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலையில், செம்மஞ்சேரி பகுதியில், 5.55 ஏக்கர் அரசு இடத்தில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு, வருவாய் துறை வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் 50 பேர் கும்பலாக சென்று, வேலியை அடித்து நொறுக்கியதுடன், அதிகாரிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், ஓ.எம்.ஆரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மாவட்டம், ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் தாலுகா, செம்மஞ்சேரி கிராமம் சர்வே எண்: 394, 395ல், 10 ஏக்கர் இடம் உள்ளது. இதில், 2000ம் ஆண்டு, தரமணி, பெருங்குடி, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த, 300 பேருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.மீதம், 6.50 ஏக்கர் இடம் உள்ளது. இதில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், சுற்றியும் வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. முதற்கட்டமாக, 5.55 ஏக்கர் இடத்தில் வேலி அமைக்கும் பணி கடந்த வாரம் துவங்கியது.அப்போது சிலர், தங்களுக்கும் அரசு சார்பில் இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினர். அவர்கள் கூறிய விபரங்கள் வருவாய் துறை ஆவணங்களில் இல்லை.எனினும், ஏற்கனவே அங்கு வீடு கட்டி வசிப்போருக்கு எந்த இடையூறு ஏற்படுத்தாமல், மற்ற இடங்களில் வருவாய் துறை அதிகாரிகள் பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுத்தனர்.இந்த நிலையில், 50 பேர் கும்பல் நேற்று முன்தினம், இரும்பு பாதுகாப்பு வேலியை அகற்றி, அத்துமீறி இடத்திற்குள் புகுந்தனர்.அங்கு, வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வி.ஏ.ஓ., பாலசுப்ரமணியனிடம் வாக்குவாதம் செய்தனர். 'அரசுக்கு சொந்தமான இடத்தில் தான் வேலி போடுகிறோம்' என அவர் கூறியும், அந்த கும்பல் கேட்காமல், அவர் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும், அவரது மொபைல் போனையும் பறித்தது.தாக்குதல் சம்பவத்தை தடுக்க முயன்ற, அங்கிருந்த வருவாய் துறை அதிகாரிகளையும் அந்த கும்பல் அடித்து கீழே தள்ளி, ரவுடியிசத்தில் ஈடுபட்டது. இது தகவலறிந்து, செம்மஞ்சேரி பகுதி மக்கள் வரவும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.இச்சம்பவம் குறித்து, வி.ஏ.ஓ., பாலசுப்ரமணியன், செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்தார். தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.அரசு இடத்தை பாதுகாத்த வி.ஏ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், ஓ.எம்.ஆரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து எங்களை பாதுகாக்க வேண்டும் என, வருவாய் துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.செம்மஞ்சேரி மக்கள் கூறியதாவது:அரசுக்கு சொந்தமான இடத்தை, 5 முதல் 10 சென்ட் என வீட்டு மனைகளாக கூறுபோட்டு, சில கும்பல் விற்பனை செய்துள்ளது. இதன் மதிப்பு, 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.இந்த இடத்தின் அருகில், 105 ஏக்கர் பரப்பில் சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது. இதையறிந்து தான், இந்த பகுதியில் வளர்ச்சியை கருத்தில் வைத்து, அக்கும்பல் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த இடத்தை ஒட்டி, செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் கிராமம் உள்ளது. அங்குள்ள சர்வே எண்ணை வைத்து, இங்குள்ள இடத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.அபார வளர்ச்சி அடைந்துள்ள சோழிங்கநல்லுார் தொகுதியில், பெரும்பாலான அரசு துறைகள், வாடகை கட்டடத்தில் உள்ளன. இங்கு, ஒருங்கிணைந்த அரசு வளாகம் கட்டலாம். ஐ.டி., நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதியானதால் அரசு விடுதி கட்டி வருவாய் ஈட்ட முடியும். தவிர, அரசு ஊழியர்கள் குடியிருப்புகளும் கட்டலாம்.எனவே, அரசு இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க, தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.20 பேர் மீது புகார்
வேலி அமைக்கும்போதே சிலர், அரசு எங்களுக்கும் இடம் ஒதுக்கியதாக கூறினர்; அவர்களிடம் ஆவணங்கள் இல்லை. அவர்கள் கூறியதை வைத்து, வருவாய் துறை ஆவணங்களையும் ஆய்வு செய்தோம்; எந்த தகவலும் இல்லை.வீடு கட்டிய, 10க்கும் குறைவான நபர்களுக்கு இடையூறு செய்யாமல் வேலி அமைத்தோம். அவர்களுக்கு இடம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும்.காலி இடத்தை கூறு போட்டு விற்ற நபர்கள் தான், கும்பலாக வந்து தாக்குதல் நடத்தினர். அவர்களில் தாக்குதல் நடத்திய, 20 பேர் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம். -அதிகாரிகள்
திருப்பரங்குன்றத்திலம் அடாவடி காற்றில் பறக்கும் ஐகோர்ட் உத்தரவு@@செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த, கீரப்பாக்கம் பகுதியில், சதுரங்கப்பட்டினம், மெய்யூரைச் சேர்ந்த பச்சையப்பனுக்கு சொந்தமாக, சில ஏக்கர் நிலம் உள்ளது. தி.மு.க., பிரமுகரான இவர், திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு துணைத்தலைவராக உள்ளார்.நிலத்தை வீட்டுமனைகளாக விற்க, தி.மு.க., பிரமுகரும், அதே ஒன்றியக்குழு, 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலரான ஜெயபாலிடம், சில ஆண்டுகளுக்கு முன், அவர் ஒப்படைத்துள்ளார்.'பாலாஜி நகர்' என்ற வீட்டுமனையாக மாற்றியபோது, மனைப்பிரிவு வளாக முன்புறம் உள்ள, அரசு புன்செய் தரிசு நிலத்தை ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்டி, பாதை அமைத்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது. அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து, திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் புகார் கூறினர்.சர்வே எண்: 94பி - 1சி1ல் 50 சென்ட், அரசு புன்செய் தரிசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், வருவாய் துறையினர் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முருகதாஸ் என்பவர், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற, ஏப்., 5ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதன் பிறகும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.இதற்கிடையே, வீட்டுமனைப் பிரிவு பகுதிக்கு, செங்கல்பட்டு சாலையிலிருந்து அணுகுபாதை அமைப்பதற்காக, ஆக்கிரமிப்பாளர்கள் ஜல்லிக்கற்கள் கொட்டி நிரப்பினர். தகவலறிந்த வருவாய் துறையினர் ஆய்வில், பச்சையப்பன் மட்டுமின்றி, கீரப்பாக்கத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும், 30 சென்ட் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, கிடங்கு, முள்வேலி அமைத்துள்ளதை அறிந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த மே 16ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளதாக, பச்சையப்பன், மூர்த்தி மற்றும் ஜல்லிக்கற்கள் குவித்த ஜெயபால் ஆகியோருக்கு, தாசில்தார் கடிதம் அனுப்பினார். ஆனால், குறிப்பிட்ட அந்நாளிலும், ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. மிரட்டல் காரணமாக, அதிகாரிகள் தயங்குவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, முருகதாஸ் கூறுகையில், “ஆக்கிரமிப்பாளர் தி.மு.க., பிரமுகர் என்பதால், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அதிகாரிகள் அகற்றாமல் உள்ளனர். அவமதிப்பு வழக்கு தொடர உள்ளேன்,” என்றார்.எல்லை கண்காணிப்பு அவசியம்
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் கிராமம் பகுதியில் உள்ள பட்டாதாரர் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள், அங்குள்ள சர்வே எண்ணை வைத்து, அரசுக்கு சொந்தமான சென்னையின் செம்மஞ்சேரி கிராமத்தின் இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்து, விற்பனை செய்துள்ளது தெரிய வருகிறது.உதாரணத்திற்கு, அங்குள்ள சர்வே எண்ணில் மொத்த பரப்பு 50 சென்ட் என்றால், அதே சர்வே எண்ணில் உட்பிரிவு, 1, 2 என பயன்படுத்தி, செம்மஞ்சேரி கிராமத்தில் உள்ள அரசு இடத்தை காட்டி விற்பனை செய்துள்ளனர். பிரச்னைக்குரிய இடத்தை சுற்றி, இரண்டு மாவட்ட எல்லையிலும், 20 ஏக்கருக்கு மேல் அரசுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இந்த இடத்தை பாதுகாக்க, இரு மாவட்ட அதிகாரிகளும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.