| ADDED : ஜூலை 18, 2024 12:20 AM
சென்னை, சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி., நகரில் செட்டிநாடு வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று அதிகாலை 1:55 மணிக்கு ஓவியா உதயநிதி என்ற மெயில் ஐடி.,யில் இருந்து, பள்ளியின் மெயில் ஐ.டி.,க்கு மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதலட்சுமி, காலை 10:00 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தவகல் தெரிவித்தார். போலீசாரின் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.இதேபோல், மயிலாப்பூர் வித்யாமந்திர் பள்ளிக்கு, இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில், வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் புரளி என தெரிந்தது. இதுகுறித்து, மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிந்து, செம்மஞ்சேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர். சென்னையில் இருந்து வரும் விமானத்தில் பவுடர் வடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இதில் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும், என கோல்கட்டா விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 1:45 மணிக்கு இ - மெயில் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலைய இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை அங்குலம் அங்குலமாக சோதித்தனர். மேலும், மற்ற நகரங்களுக்கு செல்லும் விமானங்களையும் சோதனை செய்தனர். சோதனைக்கு பின், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்தவர் குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.