சென்னை, சென்னையில் விமான நிலையத்தில் இருந்து, நேற்று காலை 9:50 மணிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான துபாய் நகருக்கு செல்ல 'எமிரேட்ஸ்' பயணியர் விமானம் தயாராக இருந்தது.இந்த நிலையில், காலை 9:00 மணிக்கு சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு, மர்ம 'இ - மெயில்' ஒன்று வந்தது. அதில், எமிரேட்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.இதையடுத்து, விமான நிலைய இயக்குனர் தலைமையில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர், சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அதேநேரம், விமானத்தை பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய் உதவியோடு, அங்குல அங்குலமாக சோதனை செய்தனர். மூன்று மணி நேர சோதனைக்குப் பின், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.இதையடுத்து, நேற்று இரவு 11:00 மணிக்கு, விமானம் துபாய்க்கு புறப்பட்டு செல்லும் என, அறிவிக்கப்பட்டது. இதனால், பயணியர் 15 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பயணியர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சமரசம் பேசினர். இதையடுத்து, பயணியர் அனைவரும் விமான நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.துருக்கியில் இருந்து...சமீபமாக மிரட்டல் கடிதம் அனுப்புவது ஒரே நபர் தான் என்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் இந்த மிரட்டல் இ - மெயில் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் இருந்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. மர்ம நபரை கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
நள்ளிரவு காற்றுடன் மழை 15 விமான சேவை பாதிப்பு
துபாய் - சென்னை 'எமிரேட்ஸ்' விமானம், அபுதாபி - சென்னை 'எத்தியாட்' விமானம், சிங்கப்பூர் - சென்னை 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், புனே 'இண்டிகோ' விமானம், லண்டன் 'பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ்' விமானம், பிராங்பர்ட் 'லுப்தான்ஷா' விமானம் என, ஏழு விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.மழை காரணமாக, எமிரேட்ஸ் விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. மழை நின்றபின் மற்ற விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.மேலும் சென்னையில் இருந்து அபுதாபி, ஆமதாபாத், சார்ஜா, தோஹா, டில்லி, துபாய், சிங்கப்பூர், பிராங்பர்ட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
2 வாரத்தில் 6 சம்பவம்
சென்னை விமான நிலையத்திற்கு, சில வாரங்களாகவே தொடர் வெடிகுண்டு மிரட்டல், புறப்பாடு மற்றும் வருகை தரும் விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த இரு வாரங்களில் மட்டும் ஆறு முறை சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இச்சம்பவங்கள் பயணியர் மட்டுமின்றி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.