உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 8.36 லட்சம் சதுர அடி மெகா அலுவலக வளாகம் ரேடியல் சாலையில் கட்டுகிறது பிரிகேட் குழுமம்

8.36 லட்சம் சதுர அடி மெகா அலுவலக வளாகம் ரேடியல் சாலையில் கட்டுகிறது பிரிகேட் குழுமம்

சென்னை, சென்னை, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், 8.36 லட்சம் சதுர அடி பரப்பளவில், பெரிய அலுவலக வளாகத்தை, 'பிரிகேட்' குழுமம் கட்ட திட்டமிட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு இணையாக, அலுவலக வளாகங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது.தகவல் தொழில்நுட்பம் மட்டுமல்லாது நிதி, ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்கள் அமைக்க, இட தேவை அதிகரித்துள்ளது. இத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கட்டுமான நிறுவனங்கள் புதிய வளாகங்களைக் கட்ட ஆர்வம் காட்டி வருகின்றன. குடியிருப்புகளுக்கு இணையாக அலுவலக வளாகங்கள் கட்டுமான திட்டங்கள் அதிகரித்து உள்ளன. இந்த வகையில் சென்னை, பழைய மாமல்லபுரம் சாலை பெருங்குடியில், 'பிரிகேட்' குழுமம் சார்பில், டபிள்யு.டி.சி., என்ற பெயரில் ஐ.டி., மற்றும் அலுவலக வளாகம் கட்டும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தொழில் நிறுவனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பிரிகேட் குழுமம் புதிய திட்டங்களில் இறங்கியுள்ளது. இதன்படி பல்லாவரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், 400 கோடி ரூபாய் முதலீட்டில், பிரமாண்ட அலுவலக வளாகம் கட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதற்காக, சென்னையைச் சேர்ந்த அக்னி எஸ்டேட்ஸ் மற்றும் பவுண்டேஷன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இங்கு, அக்னி எஸ்டேட்ஸ் நிறுவனம் ஏற்கனவே, 6 ஏக்கர் நிலத்தில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 10 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கான அலுவலக வளாகம் கட்ட திட்டமிட்டது. இத்திட்டம், 2020ல் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது பிரிகேட் நிறுவனத்துடன் இணைந்து, புதிய அலுவலக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக தெரிகிறது.பழைய மாமல்லபுரம் சாலை, விமான நிலையம் அமைந்துள்ள ஜி.எஸ்.டி., சாலை ஆகியவற்றை இணைக்கும் இடத்தில் கட்டப்படும் இதுபோன்ற அலுவலக வளாகங்களை குத்தகை எடுக்க, தனியார் நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி