| ADDED : ஜூலை 05, 2024 12:17 AM
சென்னை, இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பு சார்பில், 2வது தேசிய ஓபன் ரேங்கிங் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப், உ.பி., மாநிலம் நொய்டாவில் நடந்தது.தமிழகம், குஜராத், உ.பி., மற்றும் ராஜஸ்தான் உட்பட 11 மாநிலங்களைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.அணிகளுக்கான போட்டியான 'ரோலர் டர்பி' மற்றும் தனி நபருக்கான 'பேன்சி இன்லைன்' பிரிவில் சுற்றுகளும் நடந்தன. இதில், தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், தமிழக அணி பங்கேற்றது.போட்டியில் ஒட்டுமொத்தமாக உ.பி., 'ஏ' அணி தங்கம் வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ராஜஸ்தான் மாநிலம் வெள்ளியும், தமிழகம் வெண்கலப் பதக்கமும் வென்றது. தமிழக அணியில், சென்னை அடுத்த புழல் காவாங்கரையைச் சேர்ந்த, வேலம்மாள் நியூ ஜெயின் பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி ஆருஷி சவுராசியா பங்கேற்றார்.இவர், அணி மற்றும் தனிநபர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெண்கலப் பதக்கம் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.