எண்ணுார்:எண்ணுார், பர்மா நகர், பீலிக்கான் முனீஸ்வரர் - அங்காள ஈஸ்வரி கோவில் பழமையானது. இக்கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதம், தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, 3ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.விழா நாட்களில், உற்சவ தாயார் சிறப்பு மலர் அலங்காரங்களில் எழுந்தருளி, பர்மா நகரின் வீதிகளில் வலம் வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக, எர்ணாவூர் - பாரதியார் நகர் கடற்கரையில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவ தாயார் எழுந்தருளினார். பின், பெண்கள் முளைப்பாரி அணிவகுத்தது.தொடர்ந்து, பக்தர்கள் கடலில் புனித நீராடி, அலகு, ராட்சத அலகு, கூண்டுவேல், மணிவேல், இளநீர் வேல் அணிந்தும், தீச்சட்டி ஏந்தியும் மருளாடி வந்தனர்.கோவில் வளாகத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த, அக்னி குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.இரவு, 9:00 மணி நிலவரப்படி, 1,600க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தியதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், திருவிழாவை காண, 15,000 க்கும் அதிகமான மக்கள் வந்திருந்தால், எர்ணாவூர், பாரதியார் நகர் சந்திப்பு - எண்ணுார் பர்மா நகர் சந்திப்பு வரை, போக்குவரத்து நிறுத்தப்பட்டது.