| ADDED : ஜூலை 11, 2024 12:34 AM
சென்னை, சென்னை மாநகராட்சியில், 2018ல் தெருநாய்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, 59,000 தெருநாய்கள் கணக்கிடு செய்யப்பட்டது. தற்போது, 2 லட்சம் தெருநாய்கள் வரை இருக்கலாம் என கணக்கிடு செய்யப்பட்டுள்ளது.எனவே, கல்லுாரி மாணவர்கள் உட்பட பல்துறையுடன் இணைந்து, தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணியை, மாநகராட்சி துவக்கி உள்ளது.இதற்காக, பிரத்யேக மொபைல் ஆப் பயன்படுத்தப்பட்டு, அதில் தெருநாய்கள் படம் பிடித்து, கணக்கிடப்படுகிறது.இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சென்னையில் நடத்தப்படும் தெருநாய்கள் கணக்கீடு, மூன்று மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதில், தெருநாய்கள் குறித்த விபரங்களுடன், அவற்றின் பராமரிப்பாளர், பராமரிப்பாளர் இல்லாத பகுதிகள் மற்றும் தெருநாய்கள் இல்லாத தெருக்கள் உள்ளிட்ட விபரங்களும் சேகரிக்கப்படும்.இதில், கருத்தடை செய்யப்படாமல் உள்ள நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசிகள் போடப்படும். அத்துடன், செல்லப்பிராணிகள் வளர்ப்போர் குறித்த விபரங்களும் சேகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.