சென்னை, தாம்பரம் பணிமனையில் இன்ஜினியரிங் மற்றும் சிக்னல் மேம்பாட்டு, பணிமனை மறு வடிவமைப்பு பணிகள், வரும் ஆக., 1 முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், பல்வேறு ரயில்களின் சேவை மாற்றப்படுவதுடன் சில ரயில் சேவைகள் ரத்தும் செய்யப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து இரவு, 11:00 மணிக்கு புறப்படும் தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா சூப்பர்பாஸ் எக்ஸ்பிரஸ் ரயில், வரும் ஆக., 1 முதல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில், ஆக., 13ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. சேவை மாற்றம்
எழும்பூரில் இருந்து, இரவு 11:55 மணிக்கு சேலத்துக்கு புறப்படும், சேலம் அதிவிரைவு ரயில், ஆக., 1 முதல் 14ம் தேதி வரை, சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக இயக்கப்படும். செங்கல்பட்டிலிருந்து, ஆக., 8ம் தேதி மாலை 4:00 மணிக்கு புறப்படும் காச்சிகுடா போர்ட் சர்கார் விரைவு ரயில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூர் மற்றும் கூடூர் வழியாக செல்லும். பகுதி ரத்து
எழும்பூரில் இருந்து, தினமும் காலை 5:35க்கு புறப்படும் காரைக்குடி விரைவு ரயில், இனி செங்கல்பட்டிலிருந்து புறப்படும். எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு, ஆக., 8, 9, 10ம் தேதி மாலை 3:45க்கு புறப்படும் பல்லவன் அதிவிரைவு ரயில், செங்கல்பட்டிலிருந்து மாலை 4:45க்கு புறப்படும்.தினமும் எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை விரைவு ரயில், 14ம் தேதி வரை மதியம் 2:45 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து புறப்படும். மறுமார்க்கத்திலும், செங்கல்பட்டு வரை இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு செல்லும் ராக்போர்ட் விரைவு ரயில் செங்கல்பட்டிலிருந்து புறப்படும்.தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய ஹைதராபாத் சார்மினர் விரைவு ரயில், கடற்கரையில் இருந்து புறப்படும். தாம்பரத்தில் இருந்து, ஆக., 1, 4, 6, 8, 11, 13ம் தேதிகளில் செங்கோட்டை செல்ல வேண்டிய விரைவு ரயில், விழுப்புரத்தில் இருந்து புறப்படும். மறு மார்க்கத்தில், 2, 5, 7, 9, 12ம் தேதிகளில் தாம்பரம் வரவேண்டிய ரயிலும், விழுப்புரத்தில் நிறுத்தப்படும். சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியிலிருந்து புறப்படும். சென்னை - திருச்சி இடையில் ரத்தாகும். மறுமார்க்கத்திலும் திருச்சி வரை இயக்கப்படும். தாம்பரம் ஜசிதஹ் அதிவிரைவு ரயில், ஆக., 3, 10ம் தேதிகளில் எழும்பூரில் இருந்தே புறப்படும். மறு மார்க்கத்திலும், எழும்பூரில் நிறுத்தப்படும். ஆக., 2, 9ம் தேதிகளில், சில்காட் டவுனில் இருந்து தாம்பரம் வரவேண்டிய ரயில், எழும்பூருடன் நிறுத்தப்படும். ஆக., 5, 12ம் தேதிகளில், தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய சந்திரகாச்சி அந்த்யோதயா ரயில், சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும். இதே ரயில், 7, 14ம் தேதிகளில் எழும்பூரில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.