உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில்களில் தேரோட்டம் கோலாகலம்

கோவில்களில் தேரோட்டம் கோலாகலம்

குன்றத்துார், பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரால், குன்றத்துாரில் கட்டப்பட்ட நாகேச்சர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரகங்களில் ராகு தலமாக விளங்குகிறது.இங்கு, சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா சென்றார்.விழாவின் ஏழாவது நாளான நேற்று, திருத்தேர் விழா நடந்தது. காலை 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். பின், தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதி வழியாக பவனி சென்ற தேர், பகல் 1:00 மணிக்கு மீண்டும் நிலையத்தை சென்றடைந்தது. தேரின் நான்கு சக்கரமும் நன்கொடையாளர்கள் மூலம் இரும்பு சக்கரமாக அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. இதனால், தேர் இயக்குவதற்கு எளிதாக இருந்தது.  சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவிலில், சித்திரை மாதப் பெருவிழா, 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாளான 16ல், அதிகார நந்தி சேவை நடந்தது. நேற்று, தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.அதிகாலை உற்சவர் காரணீஸ்வரர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. காலை 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்பாளுடன் உற்சவர் எழுந்தருளினார்.பின், பக்தர்கள் நமச்சிவாய கோஷத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாடவீதிகளை வலம்வந்த உற்சவர் காரணீஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு 9:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன், தேரில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளினார். சிந்தாதிரிப்பேட்டையில், திரிபுரசுந்தரி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான தேர் திருவிழா நேற்று நடந்தது.நேற்று காலை 8:15 மணியளவில் ஆதிபுரீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதி வழியாக சென்று பிற்பகல் 1:00 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி