அடையாறு, ஓ.எம்.ஆரில் முக்கிய சந்திப்பாக, டைடல் பார்க் உள்ளது. ஐ.டி., நிறுவனங்கள் உள்ளதால், இந்த சந்திப்பில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். மேலும், ரயிலில் வந்து மாறி செல்ல, பேருந்துக்காக பயணியர் கூட்டமாக காத்திருக்கின்றனர்.குறிப்பாக, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், மேடவாக்கம், தரமணி, வேளச்சேரி, கோயம்பேடு நோக்கி செல்லும் பயணியர் நிற்கும் நிறுத்தத்தில், கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த இடத்தில், யு வடிவ மேம்பாலம், நடைமேம்பாலம், மெட்ரோ ரயில் சுரங்கபாதை அமைக்கப்படுகிறது. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் இடநெருக்கடியில் தவிக்கின்றனர்.இந்த பகுதியில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு, மெட்ரோ பணிகளுக்காக அகற்றப்பட்டது. மாற்று மின்விளக்கு அமைக்கவில்லை. இதனால், டைடல்பார்க் சந்திப்பு கும்மிருட்டாக உள்ளது.இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், அச்சத்துடன் நிற்கின்றனர். மேலும், சாலையின் குறுக்கே செல்லும் பாதசாரிகள், வாகனங்களில் சிக்குவதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.இருட்டாக இருப்பதால், சிக்னல் மாறும்போது குறுக்கே வரும் வாகனங்கள் தெரியாமல், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர்.முக்கிய சந்திப்பாக இருப்பதால், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.