உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 9 மாவட்ட மீனவர்களுடன் ஆலோசனை கூட்டம் எல்லை தாண்டுவதால் மோதலை தடுக்க நடவடிக்கை

9 மாவட்ட மீனவர்களுடன் ஆலோசனை கூட்டம் எல்லை தாண்டுவதால் மோதலை தடுக்க நடவடிக்கை

செய்யூர், எல்லை தாண்டி மீன் பிடிப்பது, தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவது, அதிவேக இன்ஜின்கள் கொண்டு விசைப்படகு இயக்குவதால், மீனவ மாவட்டங்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.சமீபத்தில், நாகை மாவட்ட மீனவர்கள், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் மீன் பிடித்தபோது பிரச்னை ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்களால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படுகிறது.இதை தவிர்க்க, தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை அழைத்து, ஆண்டுக்கு ஒருமுறை பேச்சு நடத்தப்படும்.மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள், மீனவ சபையினர் பங்கேற்பர்.இந்தாண்டு கூட்டம், சென்னை மண்டல இணை இயக்குனர் தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம், வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில், அனைத்து மாவட்ட மீனவர்கள் கூறியதாவது:காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மீனவர்கள், அதிவேக திறன் உடைய விசைப்படகுகளை பயன்படுத்தி, எல்லை தாண்டி ஆந்திர பகுதியில் மீன் பிடிக்கின்றனர்.இதனால் ஆந்திர மீனவர்கள், திருவள்ளூர் மாவட்ட மீனவர்களின் நாட்டு படகுகளை சிறைபிடித்து அபராதம் விதிக்கின்றனர்.அதிவேக திறனுடைய விசைப்படகுகள் வேகமாக இயக்கப்படுவதால், நாட்டுப்படகுகள் மற்றும் வலைகள் சேதமடைகின்றன. விசைப்படகுகள் கரையோர பகுதியில் மீன்பிடிப்பதால், நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்கள் கிடைப்பது இல்லை.கடலோர காவல் படை வாயிலாக கண்காணித்து, எல்லை தாண்டும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைப்படகுகளில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி கண்காணிக்க வேண்டும்.புதுச்சேரி பகுதி மீனவர்கள், தமிழக பகுதியில் மீன் பிடிப்பதால், மீன்வளம் குறைந்து வருகிறது. பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்களை தடைசெய்ய வேண்டும். மீன்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். மீன் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மீன் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களை தடை விதிப்பது குறித்து, ஆலோசனை செய்யப்படும், மேலும், விசைப்படகு இன்ஜின்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படும்.எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்கள் கண்டறியப்பட்டு, அபராதம், படகு பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை