உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிலுவை வழக்கு விபரங்களை தாக்கல் செய்ய குடும்ப நல கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு

நிலுவை வழக்கு விபரங்களை தாக்கல் செய்ய குடும்ப நல கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் அறிக்கை அளிக்கும்படி, குடும்பநல நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை தி.நகரைச் சேர்ந்த சூர்யா என்ற பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி, விருத்தாசலம் சார்பு நீதிமன்றத்தில் 2022ல் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அவரது கணவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, வழக்கை சென்னை ஏழாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி, கடந்தாண்டில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், 'வழக்கு விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, வழக்கை தினசரி விசாரணை என்ற அடிப்படையில் விசாரித்து முடிக்கும்படி, ஏழாவது கூடுதல் குடும்பநல நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், சூர்யா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, ''குடும்ப நல நீதிமன்றங்களில் போதுமான பணியாளர்கள் இல்லை. பல நீதிமன்றங்களில், நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன,'' என்றார்.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கை எத்தனை நாட்களில் முடிக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரரின் வழக்கு உள்பட குடும்ப நல நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன; அவற்றின் தற்போதைய நிலை குறித்தும், அந்த நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ