உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேதப்படுத்திய போன்களில் தரவுகள் மீட்பு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்

சேதப்படுத்திய போன்களில் தரவுகள் மீட்பு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்

சென்னை, பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், கொலையாளிகள் பயன்படுத்திய மூன்று மொபைல் போன்களை, திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்துார் கூவம் ஆற்றில் இருந்து போலீசார் மீட்டனர். 'சைபர்' ஆய்வகத்திற்கு அனுப்பி, அவற்றின் முழு தரவுகளையும் மீட்டுள்ளனர்.அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. இதுகுறித்து, தனிப்படை போலீசார் கூறியதாவது:ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டோரில், சென்னை அருகே திருநின்றவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், 33, முக்கியமானவர். அவர், கொலையாளிகள் பயன்படுத்திய ஆறு மொபைல் போன்களை, சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர், அந்த மொபைல் போன்களை, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துாரைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஹரிதரன், 39, என்பவரிடம் கொடுத்த அழிக்கும் படி கூறியுள்ளார். ஆறு மொபைல் போன்களையும் சேதப்படுத்தி, வெங்கத்துார் கூவம் ஆற்றில் ஹரிதரன் வீசியுள்ளார். அதில், மூன்று மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன. சேதப்படுத்திய நிலையில் இருந்ததால், அதில் இருந்து தரவுகளை மீட்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், 'சைபர்' குற்றத்தடுப்பு பிரிவில் செயல்படும், அதிநவீன ஆய்வகம் வாயிலாக தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ரவுடிகளின், 'நெட் ஒர்க்' முழுதும் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அருள், ஹரிஹரன், ரவுடிகள் பொன்னை பாலு, ராமு ஆகியோரிடம் இந்த தரவுகள் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. வழக்கறிஞர் அருளை, புழல் மற்றும் திருநின்றவூரில் உள்ள அவரது வீட்டிற்கு, அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார், அங்கு மறைத்து வைத்திருந்த மொபைல் போன் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரவுடி சீசிங் ராஜா தப்பி ஓட்டம்

சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ரவுடி சீசிங் ராஜா. இவர், ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளி. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் இவரும் ஒருவர். ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் இரண்டாவது மனைவியின் வீட்டில், சீசிங் ராஜா பதுங்கி இருப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அங்கிருந்து நேற்று மாலை சீசிங் ராஜா தப்பியுள்ளார். அவரை சுற்றி வளைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Iniyan
ஜூலை 25, 2024 13:01

இந்த திருப்பங்களை பார்த்தால் எதையோ யாரையோ காப்பாற்ற பார்க்கிறது திராவிட மாடல் விடியா அரசு என்று தோன்றுகிறது.


M Ramachandran
ஜூலை 25, 2024 12:36

பல கட்சிக்காரர்களின் கைய்யிருக்கும் போல் தெரிகிறது. எல்லாம் கொடுக்கல் வாங்கள் கதையாகா இருக்கும் போல் தெரிகிறது


மேலும் செய்திகள்



புதிய வீடியோ