| ADDED : ஜூலை 29, 2024 02:38 AM
எண்ணுார்:எண்ணுார் பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளலார் நகர், எழும்பூர், கோயம்பேடு, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும், 53 பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. பராமரிப்பில்லாத காரணத்தால், பேருந்து நிலையம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும், ஊழியர்கள் பயணியரிடம் அடாவடித் தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதுமட்டுமல்லாமல், இங்கிருந்து பழைய பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை மையப்படுத்தி, எண்ணுார் மக்கள் நலச் சங்கத்தினர், நேற்று காலை கத்திவாக்கம் பஜார் பகுதியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானத்தை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.இது குறித்து, பேருந்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எண்ணுாரில், புதிய சிவப்பு நிற பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. தினசரி சேவையில் எந்த தொய்வும் இல்லை. எண்ணுார் பேருந்து நிலையம் சீரமைப்பு பணி, துவங்கி நடக்கிறது. ஊழியர்கள் குறித்த புகார் ஏதும் வரவில்லை; அப்படி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.