மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
12-Oct-2025 | 1
அய்யப்பன்தாங்கல்:'தினமலர்' நாளிதழ், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைத்து, 'ஆடி கார்னிவெல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.அந்த வகையில், அய்யப்பன்தாங்கல் பாலாஜி அவென்யூவில் உள்ள துலிவ் தக்சின் அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று காலை முதல் 'ஆடி கார்னிவெல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' நிகழ்ச்சி நடந்தது.இதில், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். குடியிருப்பே திருவிழாக்கோலம் பூண்டது.இந்நிகழ்வில் காலையில், பெண்களுக்கான கோலப்போட்டி மற்றும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. மாலையில், டாய் ரயில், ஜம்பிங் பலுான், வாட்டர் மார்க் பெயின்ட், கேலி சித்திரம், ஓவியம், மேஜிக் ஷோ, ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.மேலும் உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல வகை போட்டிகளிலும், முதியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் ஷாம் என்பவரின் 38வது பிறந்த நாளை முன்னிட்டு 'கேக்' வெட்டி கொண்டாடப்பட்டது.துலிவ் தக்சின் அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்க தலைவர் ஜி.குருராஜ், 52, கூறியதாவது:'தினமலர்' நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், குடியிருப்புவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இது, மக்களை ஒன்று சேர்ப்பதற்கான நல்ல முயற்சியாக உள்ளது. இந்த இயந்திர உலகில், குடியிருப்புகளில் உள்ளவர்கள் பேசிக் கொள்ளவும், பழகவும் ஒரு வாய்ப்பாக உள்ளது. இதற்கு வழிவகை செய்த தினமலருக்கு நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.குடியிருப்பு நலச்சங்க துணை தலைவர் ஆர்.உலகநாதன், 62, கூறுகையில், “தினமலர் நடத்தும் 'ஆடி கார்னிவெல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' நிகழ்வில், குடியிருப்பில் உள்ள அனைவரும் பங்கேற்று கொண்டாடினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கும் விதமாக இருந்தது,” என்றார்.கல்லுாரி காலத்தில் கோல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தற்போது, 'தினமலர்' நிகழ்ச்சி வாயிலாக மீண்டும் கோலபோட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பழக இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக உள்ளது.எஸ்.மீனாட்சி, 39.கோலப் போட்டியில் பங்கேற்றவர்நாங்கள், 30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கிரிக்கெட் மட்டையை பிடித்தது, ஒருவித மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் காலத்தில் கிரிக்கெட் ஆடிய நினைவும் வந்தது. தினமலர் நிகழ்ச்சி வாயிலாக, மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தது.ஜெ.ஜெயகுமார், 52.கிரிக்கெட்டில் பங்கேற்றவர்
12-Oct-2025 | 1