| ADDED : மார் 27, 2024 12:06 AM
பள்ளிப்பட்டு,அரக்கோணம் லோக்சபா தொகுதி மற்றும் திருத்தணி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலானோர், தொகுதியின் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவிலில் பூஜை நடத்தி, பிரசாரத்தை துவங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். திருத்தணி சட்டசபை தொகுதி மற்றும் அரக்கோணம் லோக்சபா தொகுதியின் வடகிழக்கு திசையில் இந்த தலம் அமைந்துள்ளது. வாஸ்து படி, வீடு கட்டுமான பணிகளை வடகிழக்கு திசையில் பூஜை நடத்தி கட்டுமான பணியை துவங்குவது வழக்கம். அதே போல், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவிலில் பூஜை நடத்தியே துவங்குகின்றனர். லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும், சென்னையில் இருந்து திரும்பிய தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நேராக கரிம்பேடு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.இந்நிலையில், அரக்கோணம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் விஜயனும், பிரசாரத்தை துவக்கும் முன் கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை பூஜை நடத்தினார். கோவில் வாசலில் பிரசார வாகனத்திற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அர்ச்சகருக்கு வேட்பாளர் விஜயன் தட்சணை செலுத்த முற்பட்டார். உடனே அங்கிருந்த தொண்டர்கள், 'அண்ணே தட்சணை கொடுக்காதீங்க' என அலறினர். 'தட்சணை செலுத்தும் பணத்திற்கும் கணக்கு காட்ட வேண்டும். இங்குள்ள நம்முடைய தொண்டர்களே பலர் நேரடியாக இந்த காட்சிகளை சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். 'எனவே மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது முக்கியம்' என, விஜயனுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.