| ADDED : ஆக 20, 2024 12:27 AM
மணலிபுதுநகரில், மணலி புதுநகரில் 60,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, இப்பகுதி ரேஷன் கடைகளில் அரிசி வாங்க ஒருநாள், பருப்பு வாங்க மற்றொரு நாள் என, மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.இது குறித்து ரேஷன் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினால், 'பொருட்கள் வருவதில்லை' என தெரிவிக்கின்றனர். ரேஷன் பொருட்கள் வாங்க மாதந்தோறும் நடையாய் நடந்தால், அனைத்து பணிகளும் பாதிக்கப்படுகின்றன.தவிர, 10ம் தேதிக்கு பின் சென்றால், பொருட்கள் பெறுவது முடியாத காரியம் என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் கூறியதாவது:மணலிபுதுநகர் முழுதும் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. மாதத்தில், 5 - 10 நாட்கள் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க அலைவதே வேலையாக உள்ளது.ஒரே நாளில் அனைத்து பொருட்களும் வினியோகிப்பதில்லை. ஏதேனும் ஒரு பொருள் இல்லாவிட்டாலும் பிரச்னை கிடையாது.நாளொன்றுக்கு, அரிசி மட்டுமே வினியோகிக்கப்படுகின்றன. மற்றொரு நாள் பாமாயில் வாங்க செல்ல வேண்டியுள்ளது. பருப்பு வாங்க, மற்றொரு நாள் என, மாதம் முழுதும் இதே பிரச்னையாக உள்ளது.இது குறித்து, ரேஷன் கடை ஊழியர்களை கேட்டால், பொருட்கள் வருவதில்லை என்கின்றனர். திருவொற்றியூர் உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளை கேட்டால், சரியாக பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக கூறுகின்றனர்.யார் சொல்வதில் உண்மை உள்ளது என தெரியாமல், மக்கள் அலைந்து திரிவது மட்டும் தொடர்கதையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, உடனடி தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.