| ADDED : ஜூலை 19, 2024 12:24 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களில், 70 வார்டுகள் உள்ளன. இவற்றில் சாலை, கால்வாய், குப்பை, தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை, 200க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், 'டெண்டர்' எடுத்து செய்கின்றனர்.பணி தொடர்பான கோப்புகளை அதிகாரிகள் பார்வையிட்டு, கமிஷனருக்கு அனுப்புவர். அவர் ஆய்வு செய்து கையெழுத்திட்ட பின், ஒப்பந்ததாரர்களுக்கு நிதி வழங்கப்படும்.சில கோப்புகளில் சந்தேகம் இருந்தால், அவற்றை கமிஷனர் திருப்பி அனுப்புகிறார். அதற்குரிய விளக்கத்தை தர பொறியியல் பிரிவில் போதிய பணியாளர்கள் இல்லாததால், அந்த கோப்புகள் கிடப்பில் போடப்படுவதாக கூறப்படுகிறது. தாம்பரம் மாநகராட்சியை பொறுத்தவரை, கடந்தாண்டில், சாலை, மின்சாரம் உட்பட பல பணிகளுக்கான 200க்கும் மேற்பட்ட கோப்புகள் கிடப்பில் உள்ளன. மாநகராட்சியில் தேங்கி கிடக்கும் கோப்புகளில் கையெழுத்திட, மாநகராட்சி அனைத்து ஒப்பந்ததாரர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.