எண்ணுார், ஆற்றின் நன்னீரும், கடலின் உப்பு நீரும் கலக்கும் முகத்துவாரம், கழிமுகம் மற்றும் அலையாத்தி காடுகள் நிறைந்த பகுதிகளில், இறால், நண்டு, கொடுவா உள்ளிட்ட மீன் வகைகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடமாகும்.அந்த வகையில், எண்ணுார் முகத்துவாரம் 8,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.இந்த நிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியான சாம்பல் கழிவால், முகத்துவாரம் மற்றும் கழிமுகம் முழுதும், தரையாக மாறி போய் விட்டது.அதேபோல், அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் சுடுநீரால் வெப்பம் தாளாமல் மீன்வளம் அழிந்து வருவதாக, மீனவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது மஞ்சள் நிறத்திலான கழிவுகள் மற்றும் பல வண்ணங்களில் படரும் ரசாயன கழிவுகளால், மீன்வளம் கடுமையாக பாதிக்கும் சூழல் உள்ளது.இந்தாண்டில் மட்டும், ஐந்து முறைக்கு மேல் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக, ஆறு முழுதும் மஞ்சள் நிறமாக மாறிய விவகாரம் குறித்து, சமீபத்தில் நம் நாளிதழ் சுட்டிக்காட்டியது.அதைத்தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு, மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.ஆனால், இது தொடர்பாக எந்த முடிவும் தெரியவில்லை. இதற்கிடையில், தற்சமயம் அவ்வபோது, மஞ்சள் நிற கழிவுகள் ஆற்றில் படியும் நிலை ஏற்பட்டிருப்பதால், மீனவர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதன் காரணமாக, எட்டு மீனவ கிராமத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.அரசின் அவலமே, இப்பிரச்னைகளுக்கு காரணம் என, மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.வாரியத்திற்கு கேள்விஆற்றில் மஞ்சள் கழிவுகள் கலக்கும் விவகாரத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுக்கு எடுத்து சென்ற மாதிரிகளின் முடிவுகள் தெரியவில்லை. வாரியம், தனியார் துறைகளுக்கு சாதகமாக செயல்படுகிறது. சமீபத்தில் வந்த நிறுவனத்தால், இந்த பிரச்னை ஏற்படுவதாக எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. அதை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுப்படுத்த வேண்டும்.இ.குமரவேல், மீனவர், நெட்டுகுப்பம், எண்ணுார்.