சென்னை, சென்னை கிண்டி, அம்பத்துாரில் கட்டப்பட்டுள்ள, 'சிட்கோ'வின் அடுக்குமாடி தொழில் வளாகங்களில் தொழில் துவங்க, தொழில் முனைவோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழக அரசின் 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், குறு, சிறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டு செலவை குறைக்கவும், உடனே தொழில் துவங்கவும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டி வருகிறது.அதன்படி, சென்னை கிண்டி தொழிற்பேட்டையில், 95 கோடி ரூபாயில், 1.97 லட்சம் சதுர அடியில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன், தொழில் வளாகம் கட்டியுள்ளது. அங்கு, 152 தொழிற்கூட அலகுகள் உள்ளன.அம்பத்துார் தொழிற்பேட்டையில், 1.31 லட்சம் சதுர அடியில் தரை தளம் மற்றும் நான்கு தளங்களுடன் தொழில் வளாகம் கட்டப்பட்டுள்ளது. திட்ட செலவு, 64 கோடி ரூபாய். அங்கு, 112 தொழிற்கூட அலகுகள் உள்ளன.இரு அடுக்குமாடி தொழில் வளாகங்களையும் கடந்த பிப்., 24ல் அமைச்சர்கள் உதயநிதி, அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர். மூன்று மாதங்களில் மட்டும், கிண்டி அடுக்குமாடி தொழில் வளாகத்தில், 88 தொழிற்கூட அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள அலகுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அம்பத்துார் தொழில் வளாகத்தில், 31 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மேலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.இதுகுறித்து, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரு அடுக்குமாடி தொழில் வளாகத்திலும் தொழில் துவங்க, தொழில் முனைவோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.'தேர்தல் நடத்தை விதியால், அலகுகள் ஒதுக்கப்படவில்லை. இது, விலக்கி கொள்ளப்பட்டதும் தொழில் வளாகங்களில் விரைவில் ஒதுக்கீடு முடிந்து விடும்' என்றார்.