அண்ணா சதுக்கம், மெரினா கடற்கரையில் குடும்பத்தாருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, பெண்ணின் கண்ணில் மண்ணை துாவி பணம் பறித்து தப்பிக்க முயற்சித்த, 17 வயது சிறுவன் உட்பட இருவரை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அயனாவரத்தை சேர்ந்த பிரேம்குமார், 32, அவரது மனைவி லைசா, 30, ஆகியோர் தன் இரு குழந்தைகளுடன் நேற்று முன் தினம் மாலை, மெரினா கடற்கரைக்கு வந்திருந்தனர்.அவர்கள் கடற்கரை அலையை ரசித்தபின், மணற்பரப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 17 வயது சிறுவன் உட்பட மூன்று நபர்கள் கடற்கரையை சுற்றி பார்ப்பது போல் வந்தனர்.பிரேம்குமார், லைசா அமர்ந்திருந்த இடத்தின் அருகே நின்றிருந்த அவர்கள், பேச்சு கொடுப்பது போல அருகில் வந்தனர். திடீரென மண்ணை வாரி பிரேம்குமார் மற்றும் லைசாவின் கண்களில் துாவி, லைசாவிடம் இருந்த மணிபர்சை பறித்து, ஓட்டம் பிடித்தனர். சுதாரித்த பிரேம்குமார், 'திருடன்... திருடன்' என, கூச்சலிட்டபடி அவர்களை பிடிக்க ஓடினார். அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் சேர்ந்து திருடர்களை விரட்டினர். ஒருவர் தப்பிவிட, இருவரை பிடித்து மெரினா போலீசில் ஒப்படைத்தனர். இருவரும், ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த மோகன்பாபு, 23, கொடுங்கையூரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. திருடிய மணிபர்சில் மொபைல்போன் மற்றும் 1000 ரூபாய் பணம் இருந்தது. போலீசார், மணிபர்சை மீட்டு ஒப்படைத்தனர். தப்பிச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.